மைசூரு ஓவல் மைதானத்தில் ராஜ்யோத்சவா விழா
மைசூருவில் வருகிற 1-ந்தேதி ஓவல் மைதானத்தில் ராஜ்யோத்சவா நடக்கிறது என கலெக்டர் ராஜேந்திர பிராசாத் தெரிவித்துள்ளார்.;
மைசூரு:
மைசூருவில் வருகிற 1-ந்தேதி ஓவல் மைதானத்தில் ராஜ்யோத்சவா நடக்கிறது என கலெக்டர் ராஜேந்திர பிராசாத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகம் உதயமான தினம்
கர்நாடகம் உதயமான நாளான நவம்பர் 1-ந்தேதி ஆண்டுதோறும் ராஜ்யோத்சவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வருகிற 1-ந்தேதி ராஜ்யோத்சவா கொண்டாடப்படுகிறது. இந்த விழா மைசூரு பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஓவல் மைதானத்தில் கொடியேற்றத்துடன் ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், இதுவரை கன்னட ராஜ்யோத்சவ தினத்தை அரண்மனை முன்புள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் நடந்து வந்தது. அங்கு விழா நடத்த இடப்பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஓவல் மைதானம்
இதனால் ராஜ்யோத்சவ நிகழ்ச்சி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். அதன்மூலம் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். காரணம் வருகிற காலங்களில் கன்னடத்தை காப்பாற்றும் பொறுப்பு, அவர்கள் கையில் தான் உள்ளன. அதற்காக கன்னட ராஜ்யோத்சவ போன்ற நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஓவல் மைதானத்தில் வருகிற 1-ந்தேதி புவனேஸ்வரி தேவி சிலைக்கு மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி. மகாதேவப்பா பூஜை நடத்துகிறார். பின்னர் ஓவல் கிரவுண்ட் மைதானத்தில் தேசியக்கொடி மற்றும் கன்னட கொடி ஏற்றப்பட்டு கன்னட ராஜ்யோத்சவா நிகழ்ச்சியை மந்திரி மகாதேவப்பா தொடங்கி வைக்கிறார்.
அலங்கார அணிவகுப்பு
இதே நேரத்தில் கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இருந்து புவனேஸ்வரி தேவி உடன் பல்வேறு கலா குழுவினர்களுடன் அலங்கார அணிவகுப்பு வண்டிகள் ஊர்வலமாக சென்று ஓவல் மைதானத்தை வந்தடைகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு பாராட்டு விழா நடக்கிறது. மைசூரு கலா மந்திரா அரங்கத்தில் மாலை 6 மணி அளவில் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
காலை மற்றும் மாலை நடைபெற இருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.