அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் புகைப்படம்-வீடியோ எடுக்க தடை; கர்நாடக அரசு உத்தரவு

அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் புகைப்படம்-வீடியோ எடுக்க தடை என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-07-15 15:44 GMT

பெங்களூரு:

கர்நாடக அரசு, அரசு அலுவலகங்களுக்கு பணி நிமித்தமாக வரும் பொதுமக்கள் அங்கு வைத்து தங்களின் செல்போனில் புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் அரசின் சேவைகளை பெறும் நோக்கத்தில் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு வருகிறார்கள். அவ்வாறு வருபவர்களில் சிலர் தங்களின் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். இதனால் ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக பெண் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து அரசு அலுவலக நேரத்தில் சேவைகளை பெறும் நோக்கத்தில் வரும் பொதுமக்கள், புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது. ஒருவேளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக இருந்தால் அதற்கு முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்