கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி

கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

Update: 2023-10-16 21:54 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

மின் உற்பத்தி

கர்நாடகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மின் தட்டுப்பாடு குறித்து மின்துறை அதிகாரிகளுடன் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மின் தட்டுப்பாடு ஏற்படுவது குறித்தும், இந்த மின் தட்டுப்பாட்டை போக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. வறட்சி நிலவுகிறது. கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மின் தேவை 8 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. தற்போது மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. ஒரே நேரத்தில் திடீரென மின் தேவை அதிகரிக்கும்போது, அந்த அளவுக்கு மின்சாரத்தை வினியோகம் செய்வது கடினமாகும். மழை குறைவாக பெய்துள்ளதால் மின் உற்பத்தி குறைந்துள்ளது.

குறை சொல்லவில்லை

அதனால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆயினும் நாங்கள் மின் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிர்வகித்து வருகிறோம். கர்நாடகம் இருளில் மூழ்கி இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். இது சரியல்ல. மின் தட்டுப்பாட்டுக்கு முந்தைய பா.ஜனதா அரசு தான் காரணம். ஆனால் நாங்கள் இதுவரை யாரையும் குறை சொல்லவில்லை. டி.கே.சிவக்குமார் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தபோது, மின் உற்பத்தி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

ஆனால் முந்தைய பா.ஜனதா அரசு அதை சரியான முறையில் நிர்வகிக்கவில்லை. மின் உற்பத்தி திட்டங்களை அமல்படுத்தாமல், தற்போது எங்கள் மீது குறை சொல்கிறார்கள். தனியார் மின் உற்பத்தியாளர்களும் அரசுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். இதனால் 1,500 மெகாவாட் மின்சாரம் அரசுக்கு கிடைக்கும். மத்திய தொகுப்பில் இருந்து கர்நாடகத்திற்கு கூடுதலாக மின்சாரம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

யாரும் மாயமாகவில்லை

பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்கிறோம். பாவகடாவில் சூரியசக்தி மின் உற்பத்தி பூங்காவில் மின் உற்பத்தி திறனை 2,300 மெகாவாட்டாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கிறோம். நாங்கள் யாரும் மாயமாகவில்லை. பகல்-இரவாக பணியாற்றுகிறோம். முன்னாள் முதல்-மந்திரி, முன்னாள் மந்திரிகள் ஆலோசனை கூறினால் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம். மின் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்