புறநகர் ரெயில் திட்டம்: பெங்களூரு மக்களின் 40 ஆண்டு கால கனவை நனவாக்கும் பிரதமர் மோடி
பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தால் பெங்களூரு மக்களின் 40 ஆண்டு கால கனவை பிரதமர் மோடி நனவாக்கி உள்ளார். இந்த திட்டத்தை 40 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
மத்திய அரசு அனுமதி
தகவல் தொழில் நுட்ப நகரம், பூங்கா நகரம் என்ற புனைப்பெயர்களை கொண்ட பெங்களூரு வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்றார் போல, பெங்களூருவில் வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. இதன்காரணமாக நகரின் அனைத்து சாலையிலும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதையடுத்து, பெங்களூருவில் பஸ் போக்குவரத்தை மட்டுமே நம்பி இருந்த நகரவாசிகளுக்காக மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது.
தற்போது மெட்ரோ ரெயிலுக்கான 2-ம் கட்ட பணிகள் பெங்களூருவில் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தை தொடங்க கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாாிக்கும் பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டத்தை தொடங்க மத்திய அரசும் அனுமதி அளித்தது.
புறநகர் ரெயில் திட்டம்
இதையடுத்து, பெங்களூருவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதன்மூலம் பெங்களூரு நகரவாசிகளின் நீண்ட கால கனவு நினைவாகி உள்ளது. இந்த புறநகர் ரெயில் திட்டம் சுமார் ரூ.15 ஆயிரத்து 767 கோடியில் அமைய உள்ளது. மொத்தம் 4 காரிடார்களில் புறநகர் ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த காரிடார்களுக்கு 'சம்பிகே', 'மல்லிகே', 'பாரிஜாத', 'கனக' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் இருந்து பெங்களூரு புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த ரெயில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
40 மாதங்களில்...
4 காரிடார்களில் மொத்தம் 147.17 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த புறநகர் ரெயில் திட்டம் அமைய உள்ளது. 4 காரிடார்களிலும் மொத்தம் 57 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 103 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த புறநகர் ரெயில் திட்ட பணிகளை 40 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெங்களூரு நகரவாசிகளின் கனவு நிறைவேற இருக்கிறது.
சம்பிகே காரிடார்
சம்பிகே காரிடாரில் பெங்களூரு சிட்டியில் இருந்து தேவனஹள்ளி வரை 41.40 கிலோ மீட்டருக்கு புறநகர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் கே.எஸ்.ஆர். பெங்களூரு (பெங்களூரு சிட்டி) ரெயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீராமபுரம், மல்லேசுவரம், யஷ்வந்தபுரம், முத்யாலநகர், கோடிஹள்ளி, நீதிபதிகள் லே-அவுட், எலகங்கா, நிட்ட கல்லூரி, பெட்ட அலசூர், தொட்டஜாலா, கே.ஐ.ஏ., தேவனஹள்ளி வரை செல்ல உள்ளது.
மல்லிகே காரிடார்
மல்லிகே எனப்படும் 2-வது காரிடாரில் பையப்பனஹள்ளியில் இருந்து சிக்கபானவாரா வரை 25.01 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் சிக்கபானவாரா, ஷெட்டிஹள்ளி, ஜாலஹள்ளி, லொட்டகொல்லஹள்ளி, ஹெப்பால், நாகவாரா, பானசாவடி, பையப்பனஹள்ளி வரை ரெயில் இயக்கப்பட உள்ளது.
பாரிஜாத காரிடார்
பாரிஜாத எனப்படும் 3-வது காரிடாரில் கெங்கேரியில் இருந்து ஒயிட்பீல்டு வரை 35.52 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் கெங்கேரி, ஆர்.வி.கல்லூரி, ஞானபாரதி, நாயண்டஹள்ளி, கிருஷ்ணதேவராயா, ஜே.பி.நகர், கே.எஸ்.ஆர். பெங்களூரு, பெங்களூரு கிழக்கு, பையப்பனஹள்ளி, கே.ஆர்.புரம், ஹூடி, ஒயிட்பீல்டு ஆகிய ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கனக காரிடார்
கனக காரிடார் எனப்படும் 4-வது காரிடாரில் ஹீலலிகேயில் இருந்து ராஜனகுன்டே வரை 46.24 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறநகர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ஹீலலிகே, பொம்மசந்திரா, சிங்கேன அக்ரஹாரா, உஷ்கூர், அம்பேத்கர் நகர், கார்மேலரம், பெல்லந்தூர் ரோடு, மாரத்தஹள்ளி, கக்கதாசபுரா, பையப்பனஹள்ளி, சென்னசந்திரா, உரமாவு, ஹெண்ணூர், தனிசந்திரா, ஜகனிநகர், ஜக்கூர், எலகங்கா, முத்தேனஹள்ளி, ராஜனகுன்டே ஆகிய ரெயில் நிலையங்கள் அமைய உள்ளது.
மத்திய-மாநில அரசுகள் தலா 10 சதவீத நிதி:
வங்கி கடன் மூலம் 80 சதவீத நிதி பெற திட்டம்
பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டம் தொடங்கப்படும் என்றும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்து இருந்தார். அதன்படி, ரூ.15 ஆயிரத்து 767 கோடியில் இந்த திட்டம் அமைய உள்ளது. இந்த திட்டத்திற்கான மொத்த செலவில் மத்திய, மாநில அரசுகள் தலா 10 சதவீத நிதியை அளிக்க உள்ளது. மீதி 80 சதவீத நிதியை வங்கியின் மூலம் கடனாக பெற திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.