ராமநகருக்கு பெங்களூரு தெற்கு மாவட்டம் என பெயரிட திட்டம்

ராமநகருக்கு பெங்களூரு தெற்கு மாவட்டம் என பெயரிட திட்டமிட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

Update: 2023-10-26 22:25 GMT

பெங்களூரு:-

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பெங்களூரு புறநகர்

சன்னபட்டணா, ராமநகர், கனகபுரா, மாகடி மற்றும் ஹாரோஹள்ளி ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய ராமநகர் மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு மாவட்டம் என பெயர் மாற்ற ஆலோசித்து வருகிறோம். முன்பு தொட்டபள்ளாபுரா, நெலமங்களா, எலகங்கா, தேவனஹள்ளி, ஆனேக்கல், பெங்களூரு தெற்கு, பெங்களூரு கிழக்கு, ஒசக்கோட்டை, ராமநகர், மாகடி, கனகபுரா மற்றும் சன்னபட்டணா ஆகிய பகுதிகள் பெங்களூரு மாவட்டத்தில் இடம் பெற்று இருந்தன.

அதன் பிறகு தொட்டபள்ளாபுரா, நெலமங்களா, தேவனஹள்ளி, ஒசக்கோட்டை, சன்னபட்டணா, ராமநகர், மாகடி மற்றும் கனகபுரா தாலுகாக்களை உள்ளடக்கி பெங்களூரு புறநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தொட்டபள்ளாபுராவை தலைநகராக கொண்டு ஒசக்கோட்டை, நெலமங்களா, தேவனஹள்ளி, தொட்டபள்ளாபுராவை உள்ளடக்கி பெங்களூரு புறநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அந்த பெயர் இன்று வரை அப்படியே உள்ளது.

சர்வதேச புகழ்

அதேபோல் மாகடி, கனகபுரா, சன்னபட்டணா மற்றும் ராமநகர் தாலுகாக்களை சேர்த்து புதியதாக ராமநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ராமநகர் தலைநகரமாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு ஹாரோஹள்ளி தாலுகா இந்த மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. இப்போது பெங்களூரு நகருக்கு சர்வதேச அளவில் புகழ் கிடைத்துள்ளது. இந்த புகழ் ராமநகர், கனகபுரா, சன்னபட்டணா தாலுகாக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். என்னுடைய ஆலோசனையும் இதுவாகத்தான் உள்ளது.

அதனால் ராமநகர், சன்னபட்டணா, மாகடி, கனகபுரா மற்றும் ஹாரோஹள்ளி தாலுகாக்களை உள்ளடக்கிய ராமநகர் மாவட்டத்தை பெங்களூரு தெற்கு மாவட்டமாக பெயர் மாற்றம் செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களின் கருத்தும் கேட்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்