மகிஷா தசரா கொண்டாட அனுமதி சாமுண்டி மலையில் 144 தடை உத்தரவு

மைசூருவில் மகிஷா தசரா கொண்டாட அனுமதி வழங்கப்பட்டு்ள்ளது. இந்த விழாவையொட்டி சாமுண்டி மலையில் 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது.;

Update:2023-10-13 00:15 IST

மைசூரு

மகிஷா தசரா

மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதேப்போல் தசரா விழாவிற்கு முன்னதாகவே மகிஷா தசரா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை தலித் அமைப்பினர் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் வருகிற 13-ந் தேதி (அதாவது இன்று) மகிஷா தசரா விழா சாமுண்டி மலையில் கொண்டாடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு பிரதாப் சிம்ஹா எம்.பி. எதிர்்ப்பு தெரிவித்தார். மேலும் மகிஷா தசரா விழா நடைபெறும் நாளில் சாமுண்டி மலையில் இந்து அமைப்பினர் சார்பில் ஊர்வலம் நடத்தப்படும் எனவும், இந்த விழாவை நடத்த அனுமதி வழங்கக்கூடாது எனவும் அவர் கூறினார்.

இதற்கு தலித் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில், நேற்று மகிஷா விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் மகிஷா தசரா கமிட்டி பிரமுகர்களான புருஷோத்தம், மகேஷ் சந்திரகுரு, கே.எஸ். பகவான், ஞான பிரகாஷ் சுவாமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் எதிர் தரப்பு சார்பில் பிரதாப் சிம்ஹா எம்.பி. ஸ்ரீவத்ஷா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

144 தடை உத்தரவு

ஆலோசனை கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் ரமேஷ் பேசுகையில், இந்த ஆண்டு சாமுண்டி மலையில் மகிஷா தசரா நடத்த அனுமதி வழங்கவில்லை. டவுன் அம்பேத்கர் சிலை வளாகம், டவுன்ஹால் பின்புறம் உள்ள வளாகம் ஆகிய இடங்கிளில் மகிஷா தசரா கொண்டாட அனுமதி வழங்கப்பட்டு்ள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களை தவிர வேறு எங்கும் மகிஷா தசரா விழா கொண்டாட கூடாது. அவ்வாறு கொண்டாடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சாமுண்டி மலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று (நேற்று) இரவு 12 மணி முதல் 14-ந் தேதி மதியம் 12 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இ்ருக்கும்.

5 பேர் மட்டும் அனுமதி

சாமுண்டி மலை மகிஷாசூரன் சிலை இருக்கும் இடத்திற்கு கூட்டமாக செல்ல அனுமதி இல்லை. 5 பேர் மட்டுமே மலைக்கு சென்று மகிஷா சூரன் சிலைக்கு மலர் தூவி வணங்கி வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்