போராட்டங்களில் பங்கேற்றவர்களை வழக்குகளில் இருந்து விடுவிக்க கர்நாடக அரசு முடிவு
காவிரி நதி நீர், மேகதாது பாதயாத்திரை உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்றவர்களை வழக்குகளில் இருந்து விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க உள்துறைக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
காவிரி நதி நீர், மேகதாது பாதயாத்திரை உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்றவர்களை வழக்குகளில் இருந்து விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க உள்துறைக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
மேல்-சபை உறுப்பினர் கடிதம்
கர்நாடகத்தில் காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி பாதயாத்திரை நடைபெற்றது. இந்த விவகாரங்கள் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று மேல்-சபை உறுப்பினரான தினேஷ் கோலிகவுடா, முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
தினேஷ் கோலிகவுடா எழுதி இருந்த கடிதத்தில், இதற்கு முன்பு மாநிலத்தின் நிலம், நீர், மொழி விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவான வழக்குகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதுபோல், காவிரி நதிநீர் விவகாரத்தில் கன்னட அமைப்புகள், காங்கிரஸ் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், என்று கூறி இருந்தார்.
வழக்குகளில் இருந்து விடுவிக்க...
மேல்-சபை உறுப்பினர் தினேஷ் கோலிவாடாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள முதல்-மந்திரி சித்தராமையா, காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணைகட்டுவதற்காக நடந்த பாதயாத்திரை உள்ளிட்ட போராட்டங்கள் தொடர்பாக பதிவான வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை மந்திரிசபை துணை குழு முன்பாகவும், மந்திரிசபை முன்பும் அளிக்கும்படி உள்துறை மற்றும் போலீஸ் மந்திரி பரமேஸ்வருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் கர்நாடக நலனுக்காகவும், மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டும் போராட்டங்களில் ஈடுபட்டோர் மீது பதிவான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யவும், வழக்குகளில் இருந்து போராட்டக்காரர்களை விடுவிக்கவும் முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.