மைசூரு தசரா விழாவிற்கு எதிர்ப்பு
மைசூரு தசரா விழாவை ஆடம்பரமாக கொண்டாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
மைசூரு:-
கோரிக்கை
கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டது. கர்நாடகத்தில் உள்ள மொத்தம் 236 தாலுகாக்களில் 216 தாலுகாக்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த ஆண்டு தசரா விழாவை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றும், எளிமையாக கொண்டாடுங்கள் என்றும் விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றது. மேலும் இந்த ஆண்டு தசரா விழாவை எளிமையாக நடத்துவோம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
கைது
இந்த நிலையில் மைசூரு தசரா விழா கோலாகலமாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது. மேலும் நேற்று நடந்த ஜம்பு சவாரி ஊர்வலமும் கோலாகலமாக நடந்தது. இதுபற்றி அறிந்த விவசாய சங்கத்தினர் மற்றும் கம்பு விவசாய சங்கத்தினர் நேற்று பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் திரண்டனர். அவர்கள் தசரா விழாவை ஆடம்பரமாக கொண்டாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பால் ஆஸ்பத்திரி சர்க்கிள் அருகே சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், சாலைமறியலில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் மற்றும் கரும்பு விவசாய சங்கத்தினர் 40 பேரை கைது செய்தனர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய விவசாய சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
மாநில அரசுக்கு எதிராக கோஷம்
கைதான அனைவரும் மைசூருவில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் அடைக்கப்பட்டனர். அங்கிருந்தபடி போராட்டக்காரர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதுபோல் இன்னொரு தரப்பு விவசாய சங்கத்தினர் மைசூரு-டி.நரசிப்புரா சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை நஞ்சன்கூடு போலீசார் கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இருந்து மைசூருவில் போராட்டம் நடத்த வந்த மற்றொரு தரப்பு விவசாய சங்கத்தினரை எல்லையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.