என்.ஆர்.புரா; புலி நகத்தில் தங்கச்சங்கிலி அணிந்த அர்ச்சகர்கள் 2 பேர் கைது

என்.ஆர்.புரா அருகே புலி நகத்தில் தங்கச்சங்கிலி அணிந்த அர்ச்சகர்கள் 2 பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2023-10-26 18:45 GMT

சிக்கமகளூரு-

என்.ஆர்.புரா அருகே புலி நகத்தில் தங்கச்சங்கிலி அணிந்த அர்ச்சகர்கள் 2 பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

'பிக்பாஸ்' நிகழ்ச்சி

கன்னட 'பிக்பாஸ்' 10-வது சீசன் நிகழ்ச்சியில் சந்தோஷ் என்கிற வர்த்தூர் சந்தோஷ் என்பவர் போட்டியாளராக இருந்து வந்தார். விவசாயியான சந்தோஷ் எருது விடும் போட்டிகளில் பங்கேற்பது, அதிகமான தங்கநகைகள் அணிவதன் மூலம் பிரபலமாகி இருந்தார். இந்தநிலையில், சந்தோஷ் தனது கழுத்தில் புலி நகத்தில் தங்கச்சங்கிலி அணிந்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் கடந்த 22-ந் தேதி 'பிக்பாஸ்' வீட்டில் வைத்து சந்தோசை கைது செய்தனர்.

இந்தநிலையில், கர்நாடகத்தில் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் புலி நகத்தில் தங்கச்சங்கிலி அணிந்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ, புகைப்படம் வைரலானது. இதையடுத்து நேற்றுமுன்தினம் கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், பா.ஜனதா எம்.பி. ஜக்கேஷ், நடிகர்கள் தர்ஷன், நிகில் ஆகியோர்களின் வீடுகளில் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

புலித்தோல் ஒப்படைப்பு

அதில், புலி நகத்தில் செய்யப்பட்ட தங்கச்சங்கிலி ஏதும் சிக்கவில்லை. மேலும், அவர்களிடம் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் மட்டும் வழங்கி உள்ளனர். மேலும், சிக்கமகளூரு மாவட்டம் கொப்பல் தாலுகா கவுரிகட்டே அருகே திருமலா டிரஸ்ட் ஸ்ரீதத்தா ஆசிரமத்தின் மடாதிபதி வினய் குருஜி புலிதோல் மீது அமர்ந்து வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியானது.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் வினய் குருஜி கடந்த ஆண்டே புலித்தோலை வனத்துறையினரிடம் ஒப்படைத்து விட்டதாக கூறினார். இந்தநிலையில், நேற்று காலை சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா காண்டியா பகுதியில் பத்ரா ஆற்றங்கரையோரம் மார்க்கண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அர்ச்சகர்களான கிருஷ்ணப்பா, நாகேந்திரா ஆகிய 2 பேர் உள்ளனர்.

வனத்துறையினர் சோதனை

இந்தநிலையில், கிருஷ்ணப்பா, நாகேந்திரா ஆகிய 2 பேர் புலி நகத்தில் தங்கச்சங்கிலி அணிந்து இருப்பதாக பாலேஹொன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பாலேஹொன்னூர் வனத்துறையினர் காண்டியா அருகே அக்ரஹாரத்தில் உள்ள அர்ச்சகர்களின் வீடுகளின் சோதனை செய்தனர்.

அப்போது கிருஷ்ணப்பா, நாகேந்திரா ஆகிய 2 பேர் புலி நகத்தில் தங்கச்சங்கிலி அணிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து பாலேஹொன்னூர் போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் கிருஷ்ணப்பா, நாகேந்திரா ஆகிய 2 பேரிடம் இருந்த தங்கச்சங்கிலியையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

4 பேர் கைது

விசாரணைக்கு பிறகு 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். சிக்கமகளூரு மாவட்டத்தில் இதுவரை புலி நகத்தில் தங்கச்சங்கிலி அணிந்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்