புதிய வாகன நிறுத்த கட்டிடம்

மைசூரு டவுன் ஹால் வளாகத்தில் கட்டப்பட்ட வாகன நிறுத்த கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது.

Update: 2023-10-18 18:45 GMT


மைசூரு:

மைசூரு டவுன் ஹால் வளாகத்தில் கட்டப்பட்ட வாகன நிறுத்த கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது.

வாகன நிறுத்த கட்டிடம்

மைசூரு நகரில் உள்ள அரண்மனையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்கள் கொண்டு வரும் வாகனங்களை நிறுத்த போதிய இடம் வசதி இல்லை. இதனால் மைசூரு மாநகராட்சி சார்பில் தனி வாகன நிறுத்தம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன்படி மைசூரு நகரில் உள்ள டவுன் ஹால் பகுதியில் வாகன நிறுத்தம் கட்டும்பணி நடந்தது.

தற்போது தசரா விழா நேரம் என்பதால் கூடுதல் வாகனங்கள் மைசூரு நகரப்பகுதிக்கு வரும். எனவே பணிகள் துரிதமாக நடந்தது. நேற்று இந்த வாகன நிறுத்த கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இதனை மாவட்ட பொறுப்பு மந்திரி எம்.சி. மகாதேவப்பா தொடங்கி வைத்தார்.

கட்டணம் வசூல்

இங்கு கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கார், ஆட்டோக்களுக்கு 2 மணி நேரத்திற்கு ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. 2 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தினால் கூடுதலாக ரூ.10 வசூல் செய்யப்படுகிறது. அதாவது கூடுதலாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது.இதேபோல மோட்டார் சைக்கிள்களுக்கு 2 மணி நேரத்திற்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தவிர கூடுதல் நேரம் நிறுத்தினால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மாநகராட்சி பணிக்கு பயன்படும்

இதுகுறித்து மந்திரி மகாதேவப்பா பேசும்போது:-

மைசூரு நகரப்பகுதிக்கு வரும் மக்கள் இந்த வாகன நிறுத்தத்தை பயன்படுத்தி கொள்ள முடியும். இங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு நகரின் எந்த பகுதிக்கு வேண்டுமென்றாலும் சென்று வரலாம். இது ஒரு பாதுகாப்பான இடம். மக்களின் வரிப்பணத்தால் இதை கட்டியிருப்பதால், இந்த கட்டிடம் மூலம் கிடைக்கும் பணம் மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்