கோலாரில், மணி கூண்டு மீது தேசியகொடி ஏற்றப்பட்டது: போலீஸ் சூப்பிரண்டுடன் முஸ்லிம் மக்கள் வாக்குவாதம்
சுதந்திர தினத்தையொட்டி கோலாரில், மணி கூண்டு மீது தேசியகொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனுமதிக்காததால் போலீஸ் சூப்பிரண்டுடன், முஸ்லிம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
கோலார் தங்கவயல்:
கோலார் மணி கூண்டு
கோலார் நகரின் மையப்பகுதியில் மணி கூண்டு உள்ளது. இந்த மணி கூண்டு பல ஆண்டுகளாக முஸ்லிம்களின் வசம் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணி கூண்டு, கோலார் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மணிக்கூண்டு மீது தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.
தேசியகொடி ஏற்றப்பட்டது
இந்த நிலையில் நேற்று மணி கூண்டு மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த முஸ்லிம்கள் தேசியகொடி ஏற்றும் விழாவில் தங்களையும் அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது அவர்களை அனுமதிக்க போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் முஸ்லிம் மக்கள், போலீஸ் சூப்பிரண்டுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு உண்டானது.
இதற்கு மத்தியில் மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா மணி கூண்டு மீது கிரேன் மூலம் சென்று அங்குள்ள கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மணி கூண்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.