மைசூரு தசரா விழாவில் முதல் முறையாக பங்கேற்கும்: மகேந்திரா யானைக்கும் பாரம் சுமக்கும் பயிற்சி

மைசூரு தசரா விழாவில் முதல் முறையாக பங்கேற்கும் மகேந்திரா யானைக்கும் பாரம் சுமக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Update: 2022-08-21 17:05 GMT

மைசூரு:

மைசூரு தசரா விழா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடந்த தசரா விழா, இந்த ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் எனப்படும் யானைகள் ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்து கம்பீரமாக நடக்க மற்ற யானைகள் அதனை பின்தொடர்ந்து செல்லும்.

இதனை காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த ஆண்டு தசரா விழாவில் 14 யானைகள் பங்கேற்க உள்ளன. முதல்கட்டமாக தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்பட 9 யானைகள் மைசூருவுக்கு வந்துள்ளன.

மணல் மூட்டைகள் சுமக்கும் பயிற்சி

மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள யானைகளுக்கு தினமும் நடைபயிற்சி உள்ளிட்ட ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சத்தான உணவு வகைகளும் கொடுக்கப்பட்டுவருகிறது. மேலும் தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானைக்கு தங்க அம்பாரியை சுமக்க வசதியாக மணல் மூட்டைகளை சுமக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், கோபாலசுவாமி யானைக்கும் அம்பாரியை சுமக்க வசதியாக மணல் மூட்டைகளை சுமக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தசரா ஊர்வலத்தின்போது அபிமன்யு யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கோபாலசுவாமி தங்க அம்பாரியை சுமப்பதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக அபிமன்யு மற்றும் கோபாலசுவாமி யானைகளுக்கு மணல் மூட்டைகளை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மகேந்திரா யானை

இந்த நிலையில் தசரா விழாவில் முதல் முறையாக பங்கேற்றுள்ள மகேந்திரா என்ற யானைக்கும் தங்க அம்பாரியை சுமக்க வசதியாக மணல் மூட்டைகளை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

அந்த யானைக்கு முதல்நாளான நேற்று 300 கிலோ மணல் மூட்டைகள் உள்பட 550 கிலோ எடையை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பாரத்தை மகேந்திரா யானை அரண்மனை வளாகத்தில் இருந்து 5 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள பன்னிமண்டபம் வரை 1 மணி நேரம் 15 நிமிடத்தில் சுமந்து சென்றது. இதேபோல், தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு, கோபாலசுவாமி யானைகளும் 5 கிலோ மீட்டர் தூரம் மணல் மூட்டைகளை சுமந்து சென்றது. 39 வயதான மகேந்திரா யானை 4,260 கிலோ எடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

பன்னிமண்டபம் வரை முதல்முறையாக தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு

மைசூரு தசரா விழாவில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை, அபிமன்யு யானை ஏற்கனவே 2 முறை சுமந்து இருந்தாலும், தற்போது தான் முதல் முறையாக அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டபம் வரை 5 கிலோ மீட்டருக்கு சுமக்க உள்ளது. கடந்த 2 ஆண்டுகளும் கொரோனா காரணமாக தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட்டதால், அரண்மனை வளாகத்தில் மட்டும் தங்க அம்பாரியை அபிமன்யு சுமந்தது. இதற்கு முன்பு பல ஆண்டுகளாக அர்ஜூனா யானை தங்க அம்பாரியை சுமந்து சென்றது.

அர்ஜூனா யானை 60 வயதை கடந்ததால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி அந்த யானை தங்க அம்பாரியை சுமப்பதில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதனால் அபிமன்யு யானைக்கு தங்க அம்பாரியை சுமக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. தற்போது தான் முதல் முறையாக அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டபம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்