மைசூரு தசரா ஊர்வலம் கோலாகலம்

கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் 50அலங்கார வண்டிகள், 81 கலைக்குழுவினருடன் நேற்று மைசூரு தசரா ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. இந்த கண்கொள்ளா காட்சியை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

Update: 2023-10-24 21:12 GMT

மைசூரு:-

கர்நாடக மாநிலம் மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா உலகப்புகழ் பெற்றது.

தசரா விழா

இது கர்நாடக மக்களால் 'நாடகஹப்பா' என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாகவும், பாரம்பரியம் மற்றும் கலாசார முறைப்படியும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான தசரா விழா கடந்த 15-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆண்டு தசரா விழாவை பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஹம்சலேகா, சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வெள்ளித்தேரில் அம்மன் எழுந்தருள அம்மனுக்கு மலர்கள் தூவி தொடங்கி வைத்தார். இது 414-ம் ஆண்டு தசரா விழா ஆகும்.

கலை நிகழ்ச்சிகள்

தசரா விழா தொடங்கிய நாள் முதல் மைசூரு முழுவதும் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், இளைஞர் தசரா, பெண்கள் தசரா, விவசாயிகள் தசரா, குழந்தைகள், திரைப்பட விழா, மலர் கண்காட்சி, கவி கோஷ்டி, விளையாட்டு போட்டிகள், மல்யுத்த போட்டிகள், உணவு மேளா இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகள், கர்நாடகத்தின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.

இதுதவிர மைசூரு அரண்மனையில் நவராத்திரி விழாவையொட்டி பூஜைகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் ராஜ உடையில் அமர்ந்து மன்னர் யதுவீர் கிருஷ்ணத்தத்த சாமராஜ உடையார் தனியார் தர்பார் நடத்தினார். மேலும் தினமும் மைசூரு அரண்மனையில் நடன நிகழ்ச்சி, இசைக்கச்சேரி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு

அதுமட்டுமின்றி தசரா விழாவையொட்டி அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் மைசூரு அரண்மனை மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. அதுமட்டுமின்றி மைசூரு நகரம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் மின்விளக்கு அலங்காரத்தில் கட்டிடங்கள் ஜொலித்தன. இதை லட்சக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.

தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியே ஜம்பு சவாரி ஊர்வலம் தான். இந்த ஆண்டுக்கான ஜம்பு சவாரி ஊர்வலம் திட்டமிட்டபடி நேற்று நடந்தது. இதையொட்டி அரண்மனை வளாகத்தில் அமைந்திருக்கும் பன்னி மரத்திற்கும், அங்குள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவிலிலும் முதல்-மந்திரி சித்தராமையா சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். சரியாக மதியம் 1.50 மணிக்கு மகர லக்கனத்தில் அவர் கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் வீற்றிருக்கும் பெரிய நந்திக்கும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அதையடுத்து அவர் சரியாக 2.30 மணியளவில் அரண்மனை வளாகத்தில் கலைக்குழுவினரின் ஊர்வலம் மற்றும் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பை தொடங்கி வைத்தார்.

55 கலைக்குழுவினர்

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அந்தந்த மாவட்டங்களின் சிறப்பு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார வண்டிகள் வந்தன. அத்துடன் கர்நாடகத்தின் கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் கிராமிய நடன குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தியபடி வந்தனர். இதில் மொத்தம் 55 கலைக்குழுவினரும், 49 அலங்கார வண்டிகளும் பங்கேற்றன. அதாவது 31 மாவட்டங்கள் சார்பில் அந்தந்த மாவட்டங்களின் சிறப்பு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் 31 அலங்கார வண்டிகளும், 18 அரசு துறைகளின் சார்பில் அந்த துறைகளின் முக்கிய அம்சங்கள், நோக்கம் குறித்த 18 வண்டிகளும் என மொத்தம் 49 அலங்கார வண்டிகள் பங்கேற்றன.

இதில் பெங்களூரு நகர மாவட்டம் சார்பில் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் - 3 விண்கலம் மற்றும் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி, பின்னர் அதில் இருந்து ரோவர் வெளி வந்து நிலவில் ஆராய்ச்சி மேற்கொண்டது போன்றும், நிலவில் இந்தியாவின் தேசியகொடி பறப்பதும் போன்றுமான அலங்கார வண்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதுபோல் கல்வித்துறை சார்பில் இடம்பெற்று இருந்த அம்பேதர் அலங்கார ஊர், தகவல் மற்றும் விளம்பர தொடர்பு துறை சார்பில் இடம்பெற்று இருந்த கர்நாடக அரசின் 5 உத்தரவாத திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்தி ஆகியவையும் பார்வையாளர்களை கவர்ந்தன. அதுபோல் டெள்ளு குனிதா, யக்ஷகானா நடனம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலைக்குழுவினரின் நடனமும் பார்வையாளர்களை கவர்ந்தன. இதை அரண்மனை வளாகத்தில் சுமார் 1½ லட்சம் பேர் கண்டு ரசித்தனர். அதுமட்டுமின்றி அரண்மனைக்கு வெளியேயும் குழுமியிருந்த லட்சக்கணக்கான மக்கள் அதை கண்டு ரசித்தனர்.

ரத்தம் சிந்தும் போட்டி

கலாசாரம் மற்றும் அலங்கார வண்டிகளின் ஊர்வலம் நடந்து கொண்டிருந்த வேளையில், தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்பட ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து யானைகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அபிமன்யு உள்பட அனைத்து யானைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

முன்னதாக மைசூரு அரண்மனை வளாகத்தில் மன்னர் யதுவீர் முன்னிலையில் அம்பா விலாஸ் அருகே உள்ள மைதானத்தில் கத்தி போட்டு ரத்தம் சிந்தும் மல்யுத்த போட்டி நடந்தது. இதில் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு பகுதியைச் சேர்ந்த ஜாட்டி இனத்தினர் மட்டுமே கலந்து கொள்வது வழக்கம். அதுபோல் நேற்றும் ஜாட்டி இனத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் காலை 10.45 மணிக்கு மைதானத்துக்கு வந்தனர்.

தனியார் தர்பார்

அவர்கள் கை விரல்களில் சிறிய கத்திபோன்ற கூர்மையான ஆயுதத்தை கட்டி இருந்தனர். அவர்களை மன்னர் யதுவீர் ஆசீர்வதித்து போட்டியை தொடங்கி வைத்தார். சரியாக காலை 11.20 மணிக்கு போட்டி தொடங்கியது. மொட்டை அடித்த வீரர்கள் மோதிக் கொண்டனர். இந்த போட்டி 12 வினாடிகளில் முடிவடைந்தது. ஒருவருடைய தலையில் ரத்தம் வடிந்ததும் போட்டி முடித்துக் கொள்ளப்பட்டது. இதில் வெற்றிபெற்றவருக்கு மன்னர் யதுவீர் பரிசு வழங்கினார்.

அதன்பின்னர் மன்னர் யதுவீர், வெள்ளி ரதத்தில் அமர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள புவனேஸ்வரி கோவிலுக்கு சென்றார். அங்குள்ள பன்னிமரத்திற்கு அவர் கலாசார முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்தார். அதையடுத்து மன்னர் யதுவீர், தர்பார் ஹாலுக்கு சென்று தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தினார். சுமார் அரை மணி நேரம் இந்த தர்பார் நடந்தது. இது இந்த ஆண்டுக்கான கடைசி தர்பார் ஆகும்.

தங்க அம்பாரியில் அம்மன்

இதற்கிடையே சாமுண்டீஸ்வரி அம்மன் தங்க சிலை, சாமுண்டி மலையில் இருந்து அரண்மனை வளாகத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இதற்காக அதிகாலையிலேயே அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அரண்மனைக்கு வந்ததும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு முதல்-மந்திரி சித்தராமையா பூஜை செய்தார். பின்னர் அரண்மனையில் வைத்து அம்மனின் தங்க சிலைக்கு பட்டுப்புடவை சாற்றி அலங்காரம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மதியம் 3 மணி முதல் 4 மணிக்குள் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரி கிரேன் உதவியுடன் அபிமன்யு யானை மீது ஏற்றி பாதுகாப்பாக கட்டப்பட்டது. அதன்பின்னர் தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளினார். அபிமன்யு யானை தங்க அம்பாரியை சுமந்து கம்பீர நடைபோட்டு யானைகள் புடைசூழ செல்ல, அதைத்தொடர்ந்து மற்ற யானைகள் அணிவகுத்து நடந்து சென்றன. இதில் அபிமன்யு உள்பட மொத்தம் 14 யானைகள் பங்கேற்றன.

ஜம்பு சவாரி ஊர்வலம்

அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மேடையின் முன்பு, அபிமன்யு யானை தங்க அம்பாரியை சுமந்தபடி நின்றது. அதையடுத்து சாமுண்டீஸ்வரி அம்மனின் தங்க சிலைக்கு

முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா, மேயர் சிவக்குமார், மன்னர் யதுவீர் ஆகியோர் மாலை 5.09 மணி அளவில் மீன லக்கனத்தில் மலர்கள் தூவி அம்மனை கும்பிட்டு வணங்கி ஜம்பு சவாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

மலர்கள் தூவியதும் பீரங்கிகள் முழங்கின. 21 தடவை பீரங்கிகள் முழங்கி குண்டுகள் வெடித்தன. அதைத்தொடர்ந்து போலீசாரின் பேண்டு இசைக்குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். இந்த சமயத்தில் அம்பாரியை சுமந்து நின்று கொண்டிருந்த அபிமன்யு யானை மற்றும் அதன் அருகே நின்று கொண்டிருந்த விஜயா மற்றும் லட்சுமி ஆகிய யானைகள் தும்பிக்கையை மேலே தூக்கி நாட்டுக்கும், மக்களுக்கும் கவுரவம் செய்தன.

கண்கொள்ளா காட்சி

பின்னர் அரண்மனை வளாகத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்னிமண்டபத்திற்கு ஜம்பு சவாரி ஊர்வலம் புறப்பட்டு சென்றது. வழிநெடுகிலும் கலைக்குழுவினரின் நடனமும், அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு, ஜம்பு சவாரி ஊர்வலத்தைப் பார்த்து மக்கள் ஆரவாரம் செய்தனர். பலர் தங்களது செல்போன்களில் இந்த நிகழ்வை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து மகிழ்ந்தனர். சாலையின் இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்து ஜம்பு சவாரி ஊர்வலத்தை கண்டுரசித்தனர்.

சுமார் 6 லட்சம் பேர் கண்கொள்ளா காட்சியான இந்த தசரா ஊர்வலத்தை நேரில் பார்த்து ரசித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் தங்க அம்பாரியில் வீற்றிருந்த சாமுண்டீஸ்வரி அம்மனையும் தரிசித்தனர். வெளிநாட்டினரும் தசரா ஊர்வலத்தை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். ஜம்பு சவாரி ஊர்வலத்தை பார்ப்பதற்காக கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்பட ஏராளமான மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

வாண வேடிக்கை

சாமுண்டீஸ்வரி அம்மனுடன் தங்க அம்பாரியை சுமந்து கொண்டு அபிமன்யு யானை பன்னிமண்டபம் அருகே உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானத்தை இரவு 7.15 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் மன்னர் யதுவீர் குதிரை சவாரி செய்து ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டார். அவர் தனது படை பலத்தை காட்டி நாட்டு மக்கள் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருப்பதாக உறுதி கூறினார். பின்னர் லேசர் கதிர்கள் ஒளிரப்பட்டு, வாணவேடிக்கைகள் நிகழ்ந்ததன் மூலம் சாமுண்டீஸ்வரி அம்மன், மகிஷா சூரனை வதம் செய்து வெற்றிபெற்று நாட்டு மக்களை காப்பாற்றினார். இந்த நிகழ்ச்சியை கவர்னர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு போலீசாரின் சாகச நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதை அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்டு களித்தனர். தசரா விழாவையொட்டி மைசூருவில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

6 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

ஜம்பு சவாரி ஊர்வலத்தையொட்டி நேற்று மைசூருவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெங்களூரு-நீலகிரி ரோடு, அசோக் ரோடு, ரமா விலாஸ் ரோடு, 100 அடி சாலை,ஜே.எல்.பி. ரோடு, மாதேஸ்வரன் சாலை, எஸ்.பி. அலுவலக ரோடு என மைசூருவில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மதியம் 1 மணி முதல் மாலை 7 மணி வரை சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது. போக்குவரத்து நெரிசலை போலீசார் சீரமைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்