கோலார் தொகுதியில் மந்திரி கே.எச்.முனியப்பா போட்டியிட விருப்பம்

கோலார் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் கே.எச்.முனியப்பா போட்டியிட விருப்பம் தெரிவித்துஇருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-10-13 18:45 GMT

கோலார் தங்கவயல்

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அதிக இடங்களை பிடித்து வெற்றி பெற செய்யவேண்டும் என்ற நோக்கில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முனைப்பு காட்டி வருகிறது. இதனால் 2 கட்சிகளும் மெகா கூட்டணிகள் அமைத்துள்ளது.

இதற்கிடையில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களை பொறுத்து இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் கர்நாடகத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றவேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது.

அதேபோல பா.ஜனதாவும், தற்போது கையில் உள்ள தொகுதிகளை மீண்டும் தக்க வைத்து கொள்ள தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் தொகுதி வாரியாக எந்த வேட்பாளர்களை நிறுத்துவது என்பது குறித்து இரு கட்சியினரிடையே போட்டி நிலவி வருகிறது.

கடந்த முறை வெற்றி பெற்ற வேட்பாளர்களை நிறுத்தினால் மீண்டும் மக்கள் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவார்கள் என்று கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

கே.எச்.முனியப்பா போட்டி

இந்தநிலையில் கோலார் நாடாளுமன்ற தொகுதியில் யார் போட்டியிட போகிறார்கள் என்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியது. குறிப்பாக ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யார் என்பதை மக்கள் அதிகளவு எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி கோலார் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக கே.எச்.முனியப்பாவை நிறுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கோலார் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக 7 முறை கே.எச்.முனியப்பா தேர்வாகியிருக்கிறார்.

2 முறை மத்திய மந்திரியாக பொறுப்பு வகித்து வருகிறார். இருப்பினும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து கடந்த 4 மாதத்திற்கு முன்பு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அதில் வெற்றி பெற்றார். தற்போது அவருக்கு உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த மந்திரி பதவியில் அவருக்கு நாட்டமில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று மேலிட தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை தனித்தனியாக சந்தித்தார்.

தேர்தல் பிரசாரம் தீவிரம்

அப்போது நாடாளுமன்ற தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதனை மேலிட தலைவர்கள் ஏற்று கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கோலார் தங்கவயல் தொகுதியில் கே.எச்.முனியப்பா போட்டியிடுவது உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக கே.எச்.முனியப்பா கோலார் தங்கவயல், பங்காருபேட்டை, மாலூர், முல்பாகல், சீனிவாசப்பூர் ஆகிய தாலுகாக்களில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்