மெஸ்காம் அலுவலகத்திற்கு பூட்டுபோட்டு கிராம மக்கள் போராட்டம்

மெஸ்காம் அலுவலகத்துக்கு கிராம மக்கள் பூட்டுப்போட்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-13 18:45 GMT

சித்ரதுர்கா-

மெஸ்காம் அலுவலகத்துக்கு கிராம மக்கள் பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெஸ்காம் மின்வாரிய அலுவலகம்

சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கெரே டவுனில் மெஸ்காம் மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று அந்த அலுவலகத்தை செல்லக்கெரே தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளை அலுவலகத்திலேயே சிறைவைத்து வெளியே பூட்டுப்போட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த செல்லக்கெரே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர்.

7 மணி நேரம் மின்சாரம்

அப்போது மாநில அரசு தினமும் இருமுனை மின்சாரத்தை 7 மணி நேரம் தொடர்ச்சியாக வழங்குவதாக அறிவித்தது, ஆனால் தற்போது ஒருநாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது, இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை, இதன்காரணமாக பயிர்கள் கருகி வருகின்றன, எனவே அரசு அறிவித்தபடி 7 மணி நேரம் இருமுனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்களை சமாதானம் செய்த போலீசார் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நிரந்தரமாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மெஸ்காம் என்ஜினீயர் உறுதி

மேலும் கிராம மக்களுடன் பேசிய மெஸ்காம் என்ஜினீயர் தற்போது மின்சாரம் தட்டுப்பாட்டாக இருப்பதாகவும், விரைவில் 7 மணி நேரம் இருமுனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

பின்னர் போலீசார் மெஸ்காம் அலுவலகத்துக்கு கிராம மக்கள் போட்டிருந்த பூட்டை அகற்றி அவர்களை மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்