மேகதாது அணை விவகாரம்: மத்திய ஜல்சக்தி துறை மந்திரியிடம் நாளை ஆலோசனை

மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய ஜல்சக்தி துறை மந்திரியிடம் நாளை (வியாழக்கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-14 15:34 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

எதிர்ப்பு தெரிவிப்பது சரி இல்லை

காவிரி நதிநீர் பிரச்சினையாக இருக்கட்டும், மேகதாதுவில் அணை விவகாரமாக இருக்கட்டும் தமிழக அரசு, கர்நாடகத்திற்கு எதிராக அடிக்கடி பிரச்சினை செய்து வருகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என்று கூறி பிரதமருக்கு, தமிழக முதல்-அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். இதுபோன்று, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பது சரியானது இல்லை.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை, காவிரியில் கர்நாடக அரசு வழங்கும். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை, எக்காரணத்தை கொண்டும் கர்நாடக அரசு பயன்படுத்தாது. பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக மேகதாதுவில் அணைகட்டி, அதன்மூலம் 4.5 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி ஆகும்) தண்ணீரை பயன்படுத்தி கொள்ள கர்நாடகம் முடிவு செய்திருக்கிறது.

நாளை ஆலோசனை

பெங்களூரு வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு 30 மாநிலங்களை சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். வெளிநாடுகளை சேர்ந்த மக்களும் வசிக்கின்றனர். கூட்டாட்சி முறையில் நடக்கும் ஆட்சியில் இதுபோன்று மக்களுக்கான குடிநீர் விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. வருகிற 17-ந் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணத்தில் இருப்பதால், இந்த கூட்டம் வருகிற 23-ந் தேதிக்கு தள்ளி வைக்க வாய்ப்புள்ளது.

கர்நாடக நதிநீர் பிரச்சினை தொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை மந்திரியுடன் விவாதிக்க வருகிற 16-ந் தேதி (அதாவது நாளை) டெல்லி செல்ல உள்ளேன். டெல்லியில் மத்திய ஜல்சக்தி துறை மந்திரியை சந்தித்து மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.

இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்