சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு சம்பவத்தில் பா.ஜனதா மேல் வீண் பழி போடுகின்றனர்-மந்திரி முனிரத்னா குற்றச்சாட்டு
சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு சம்பவத்தில் பா.ஜனதா மேல் வீண்பழி போடுகின்றனர் என்று மந்திரி முனிரத்னா தெரிவித்துள்ளார்.;
கோலார் தங்கவயல்:
மந்திரி முனிரத்னா பேட்டி
தோட்டக்கலைத்துறை மந்திரியும், கோலார் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான முனிரத்னா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜனதா அரசு நல்லாட்சி நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டு சட்டசபைக்கான பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. 4 ஆண்டுகளாக ஆளும் கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரசாருக்கு எந்த ஒரு காரணமும் கிடைக்கவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு சட்டசபைக்கான பொதுத்தேர்தல் நடக்க உள்ளதால் காங்கிரசார் தேவையின்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வீண் பழி
இதுபோன்ற போராட்டங்கள் மூலம் அனுதாப அலையை பெற்றுவிடலாம் என்று காங்கிரசார் நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம் ஒரு போதும் பலிக்காது. வேண்டும் என்றே போராட்டங்கள் என்ற பெயரில் கலவரத்தை தூண்ட காங்கிரசார் சதி திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குடகில் சித்தராமையா கார் மீது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே முட்டையை வீசிவிட்டு அந்த பழியை பா.ஜனதாவினர் மீது போடுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
சம்பவத்தின்போது சித்தராமையாவின் காரை சுற்றி காங்கிரசார் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் முட்டை வீசி எறிந்துள்ளதாக உளவுத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் தேவையின்றி அந்த பழியை பா.ஜனதாவினர் மீது கூறுவதை ஒரு போதும் ஏற்கமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.