மண்டியா தெற்கு ஆசிரியர் தொகுதியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு பணி- கூடுதல் கலெக்டர் நாகராஜ் தகவல்
மண்டியா தெற்கு ஆசிரியர் தொகுதியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு பணி தொடங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கூடுதல் கலெக்டர் நாகராஜ் கூறினார்.
மண்டியா:-
தெற்கு ஆசிரியர் தொகுதி
மண்டியா மாவட்ட தெற்கு ஆசிரியர் தொகுதியில் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மண்டியா மாவட்ட கூடுதல் கலெக்டர் நாகராஜ் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் பி.யூ. கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி, பட்டப்படிப்பு கல்லூரி மற்றும் இதர கல்லூரிகள், உயர் நிலைப்பள்ளிகள், கல்வித்துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்களை நேரில் அழைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
வருகிற 6-ந் தேதி கடைசி நாள்
தெற்கு ஆசிரியர் தொகுதியில் இதுவரையில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் உடனடியாக சேர்க்கும்படியும், இதற்கான ஆவணங்களை உரிய முறையில் சமர்ப்பித்து தங்கள் வாக்குரிமையை பெறும்படியும் கூடுதல் கலெக்டர் நாகராஜ் கூறினார். இந்த பணிகளுக்கு வருகிற 6-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
அதற்குள் தெற்கு ஆசிரியர் தொகுதியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று கூடுதல் கலெக்டர் நாகராஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். கூட்டத்தில் மாவட்ட கல்வித்துறை அதிகாரி சிவராமேகவுடா, மண்டியா பல்கலைக்கழக அதிகாரி சந்திரய்யா, வட்டார கல்வித்துறை அதிகாரிகள் மகாதேவு, சவுபாக்யா, அரசு பெண்கள் கல்லூரி முதல்வர் தசரதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.