மடிகேரி தசரா விழா; சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை

மடிகேரி தசரா விழாவையொட்டி சட்டவிதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-10-18 18:45 GMT

குடகு-

மடிகேரி தசரா விழாவையொட்டி சட்டவிதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் உத்தரவிட்டுள்ளார்.

மடிகேரி தசரா

குடகு மாவட்டத்தில் ஆண்டு தோறும் மைசூரு தசரா விழாவை யொட்டி மடிகேரி தசரா விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தசரா விழா நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து  7 நாட்கள் நடைபெறும் இந்த தசரா விழா வருகிற 14-ந் தேதி நிறைவு பெறுகிறது.

இந்த தசரா விழாவையொட்டி நகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தசரா கமிட்டியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் கூறியதாவது:-

மடிகேரி தசரா விழாவையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விதிமுறையை மீறி தசரா விழாவை நடத்த கூடாது. அதேபோல பொதுமக்களும் விதிமுறைகளை மீற கூடாது. கோர்ட்டு உத்தரவு படியே செயல்படவேண்டு்ம். யாரேனும் விதிமுறையை மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 ஒலிப்பெருக்கிக்கு தடை

இரவு 10 மணிக்கு மேல் தனியாக ஒலிப்பெருக்கி வைத்து நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தசரா நிகழ்ச்சி மட்டுமே நடைபெறவேண்டும். தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. முகமூடிகள் விற்பனை மற்றும் சில தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தசரா ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெறவேண்டும். இதற்கான பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வெளி மாவட்ட போலீசாருடன் கர்நாடக ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்