பட்டாசு விபத்து நடந்த இடத்தில் லோக் அயுக்தா நீதிபதி நேரில் ஆய்வு

பெங்களூரு அருகே பட்டாசு விபத்து நடந்த பகுதியில் லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் நேரில் ஆய்வு செய்தார். பட்டாசு விபத்துகளை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-11 22:16 GMT

பெங்களூரு:-

வெடி விபத்தில் 15 பேர் பலி

பெங்களூரு அருகே அத்திப்பள்ளியில் கடந்த 7-ந் தேதி பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் தாசில்தார் சசிதர் மட்டியாலா, துணை தாசில்தார் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜு, கிராம நிர்வாக அதிகாரி பாகேஷ் ஒசமணி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நீதிபதி நேரில் ஆய்வு

இந்த நிலையில் பட்டாசு வெடி விபத்து நடந்த பகுதிக்கு நேற்று லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பட்டாசு விபத்திற்கான காரணம், அதுதொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை, பலியானவர்கள் பற்றிய தகவல்களை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் நீதிபதி பி.எஸ்.பட்டீல் கேட்டறிந்து கொண்டார். பின்னர் நீதிபதி பி.எஸ்.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

முன்எச்சரிக்கை நடவடிக்கை

அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு விபத்து குறித்து சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வெடி விபத்து சம்பவம் லோக் அயுக்தா எல்லைக்குள் வருகிறதா?, இல்லையா? என்பது பிரச்சினை இல்லை. அது முக்கியமும் இல்லை. மாநிலத்தில் இனிவரும் நாட்களில் இதுபோன்ற பட்டாசு விபத்துகள் நடைபெறாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் அப்பாவி மக்கள் 14 பேர் பட்டாசு விபத்தில் உடல் கருகி பலியாகி இருக்கிறார்கள். எனவே வரும் நாட்களில் குழந்தைகள் உள்பட அனைவரையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

வேதனை அளிக்கிறது

அதே நேரத்தில் இதுபோன்ற சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் கடிவாளம் போடுவதும் முக்கியமாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை லோக் அயுக்தா அமைப்பு எடுக்கும். சட்டவிரோதமாக செயல்படும் பட்டாசு குடோன்கள் பற்றி தகவல் தெரிவிக்காமல் மக்கள் அமைதியாக இருக்கலாமா?. அதற்காக தான் இந்த வழக்கை கவனத்தில் வைத்து கொண்டு, பட்டாசு விவகாரம் தொடர்பான துறைகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க நானே நேரில் வந்து ஆய்வு நடத்தி தகவல்களை பெற்றுள்ளேன்.

அதன்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு லோக் அயுக்தா சார்பில் சரியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். பொதுவாக சட்டத்திற்கு உட்பட்டு நடந்தால், இதுபோன்ற துயர சம்பவம் நடந்திருக்காது. பயங்கரமான வெடிப்பொருட்களை இந்த அளவுக்கு சேமித்து வைத்திருக்க கூடாது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களால் தான் 14 அப்பாவிகளை பலி கொடுக்க நேரிட்டு இருப்பது வேதனையான விஷயமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்