மேகதாது விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம்: தமிழக முதல்-அமைச்சருக்கு பசவராஜ் பொம்மை கண்டனம்

மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் நாடகம் என குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2022-06-14 15:27 GMT

பெங்களூரு:

பிரதமருக்கு கடிதம்

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டும் விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை குறித்து ஆலோசனை நடத்த கூடாது என்று கூறி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதி இருந்தார்.

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பெங்களூருவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அணைகட்டும் திட்டம் தொடங்கப்படும்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் மேகதாது அணைகட்டும் விவகாரத்தில் வருகிற 17-ந் தேதி நடக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விரிவான திட்ட அறிக்கை குறித்து ஆலோசிக்க கூடாது என்று கூறி இருப்பது சரியல்ல. இதற்கு சட்டத்தில் எந்த இடமும் இல்லை. கர்நாடக அரசு, தங்களுக்கு சேர வேண்டிய தண்ணீரை கொண்டு பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக மேகதாதுவில் அணைகட்ட முடிவு செய்துள்ளது.

பெங்களூரு நகரின் குடிநீர் திட்டத்திற்காக மேகதாதுவில் அணைகட்டும் திட்டம் தொடங்கப்படும். இதற்கு முன்பு 15 முறை கூட்டம் நடந்த போது தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல், தற்போது பிரச்சினையை எழுப்புவது சரியானது இல்லை. மேகதாது அணைகட்டும் திட்டத்தில் தமிழகத்திற்கான தண்ணீரை பயன்படுத்தி தொடங்க போவதில்லை. கர்நாடகத்திற்காக ஒதுக்கப்பட்ட தண்ணீரின் மூலமாகவே இந்த திட்டத்தை தொடங்க உள்ளோம்.

கூட்டாட்சி முறைக்கு எதிரானது

காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது, கூட்டத்தை நடத்த கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதுவது கூட்டாட்சி முறைக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர், பிரதமருக்கு எழுதிய கடித்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்பது பற்றி எனக்கு முழுமையாக தெரியவில்லை. அதுபற்றி பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் பெறப்படும்.

தமிழக முதல்-அமைச்சர் எழுதி இருக்கும் கடிதத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி சம்மதம் தெரிவிக்க சாத்தியமில்லை. இதற்கு முன்பு மேகதாது அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அறிவுறுத்தி இருந்தார். அதன்படியே, கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, அதற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதியையும் பெற்றுள்ளது.

அரசியல் நாடகம்

இந்த சூழ்நிலையில் தமிழக அரசு காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தை நடத்த கூடாது என்று கூறுவது சரியா?. காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசு ஒவ்வொரு விஷயத்திற்கும் பிரச்சினையை எழுப்பி வருகிறது. இது சாதாரணமாகி விட்டது. தமிழக அரசுக்கு, காவிரி விவகாரத்தில் அரசியல் செய்வது வாடிக்கையாகி விட்டது. இது அவர்களின் அரசியல் நாடகம். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு, பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பது சட்டத்திற்கு எதிரானது.

வருகிற 17-ந் தேதி நடக்கும் கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கூட தமிழக அரசின் எதிர்ப்புக்கு விலை கொடுக்கவில்லை. மேகதாது அணை விவகாரம் இறுதி கட்டத்தை எடடியுள்ளது. இதில், கர்நாடகத்திற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்