லியோ' படத்தை திரையிட இருந்த திரையரங்கிற்கு 'சீல்'

கோலார் தங்கவயலில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை திரையிட இருந்த திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.;

Update:2023-10-19 00:15 IST


கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயலில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை திரையிட இருந்த திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

லியோ திரைப்படம்

நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. இந்த திரைப்படம் இன்று(வியாழக்கிழமை) வெளியாக உள்ளது. அதுபோல் கர்நாடகத்திலும் 'லியோ' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் லியோ திரைப்படத்தை திரையிடும் உரிமையை ராபர்ட்சன்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கத்தின் உரிமையாளர் உரிமை கோரினார். ஆனால் அந்த திரைப்படம் திரையிடும் உரிமை ஆண்டர்சன்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு கிடைத்தது.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத ராபர்ட்சன்பேட்டையில் வசித்து வரும் ஒரு வினியோகஸ்தர், தனக்கு நெருக்கமான திரையரங்கை கண்காணித்து வரும் கவுன்சிலர்களின் கணவரை அணுகி ஆண்டர்சன்பேட்டை திரையரங்கில் லியோ திரைப்படத்தை திரையிட முட்டுக்கட்டை போட்டார். அதாவது நகரசபை கமிஷனர் பவன்குமாரை அணுகி அந்த திரையரங்கிற்கு சீல் வைத்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் நேற்று நகரசபை அதிகாரிகள் லியோ படத்தை திரையிட இருந்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள திரையரங்கிற்கு வரி பாக்கி உள்ளதாக கூறி சீல் வைத்தனர். மேலும் அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

நடிகர் விஜயின் ரசிகர்கள் ஆவேசம்

இதற்கிடையே நடிகர் விஜயின் ரசிகர்கள் திரையரங்கம் முன்பு லியோ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் பேனர்கள் வைத்திருந்தனர். இதற்கிடையே திரையரங்கிற்கு சீல் வைத்தது பற்றி அறிந்த நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர்.

இதுகுறித்து நடிகர் விஜயின் ரசிகர்கள் ரஞ்சித், ராபர்ட், வினோத் ஆகியோர் கூறுகையில், 'நடிகர் விஜயின் திரைப்படம் வெளியாகும் நேரத்தில் திரையரங்கிற்கு சீல் வைத்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் நாங்கள் உள்பட விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆதங்கம் அடைந்துள்ளோம். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடனடியாக திரையரங்கம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்