மைசூரு தசரா விழாவையொட்டி இளைஞர் தசரா இலச்சினை வெளியீடு
மைசூரு தசரா விழாவையொட்டி இளைஞர் தசரா இலச்சினை வெளியிடப்பட்டது.;
மைசூரு:
தசரா விழா
மைசூரு தசரா விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்தவிழாவை இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார். இந்தநிலையில் தசராவிழாவையொட்டி இளைஞர் தசரா விழா மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் வருகிற 18-ந்தேதி முதல் 21-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இளைஞர் தசரா விழா இலச்சினை நேற்று வெளியிடப்பட்டது.
இந்த இலச்சினையை மந்திரி எச்.சி. மகாதேவப்பா, தசரா துணை கமிட்டி சிறப்பு அதிகாரி கே.ஆர். ரக்ஷித், ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.கே. சவிதா, செயலாளர் சுபா, துணைச் செயலாளர் எச். சென்னப்பா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீமா லட்கர் ஆகியோர் வௌியிட்டனர்.
முன்னதாக இளைஞர் தசரா விழா நடைபெறும் மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மந்திரி எச்.சி. மகாதேவப்பா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீமா லட்கர் ஆய்வு நடத்தினர்.
இளைஞர் தசரா விழா
இளைஞர் தசரா தொடக்க விழாவில் கன்னட திரைப்பட நடிகர் சிவராஜ்குமார் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். கன்னட கலாசார இலாகா சார்பில் நடைபெறும் இளைஞர் தசரா நிகழ்ச்சியை தினமும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4 நாட்கள் நடைபெறும் இளைஞர் தசரா விழா எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வகையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.