ஜி.டி.தேவேகவுடா, ஜனதாதளம் (எஸ்) கட்சியை விட்டு போக மாட்டார்: குமாரசாமி பேட்டி
ஜி.டி தேவேகவுடா, ஜனதா தளம் (எஸ்) கட்சியை விட்டு போக மாட்டார் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மைசூரு:
மைசூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் பஞ்சரத்தின யாத்திரை தொடங்க உள்ளது. இந்த யாத்திரை மாநிலம் முழுவதும் சென்று கட்சியை வலுப்படுத்தப்படும். இதன்மூலம் சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தேர்தல் நெருங்கி வருவதால் இப்போதில் இருந்தே கட்சியை வலுப்படுத்த மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஜனதாதளம்(எஸ்) கட்சியின் சாதனைகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறேன்.
இந்த பஞ்சரத்தின யாத்திரை, கிராமப்புறங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு, அதனை ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கப்படுகிறது. சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ. ஜி.டி.தேவேகவுடா இன்னும் ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ. தான். அவர் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் தான் இருப்பார். கட்சியை விட்டு போக மாட்டார். அவருடன் நான் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன்.
ஜனதாதளம்(எஸ்) நடத்தும் பஞ்சரத்தின யாத்திரையில் அவரும் இருப்பார். ஜி.டி.தேவேகவுடாவின் தொகுதியான சாமுண்டீஸ்வரியில் இருந்து இந்த பஞ்சரத்தின யாத்திரை பிரசாரம் தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.