கனகபுரா பெங்களூருவில் சேர்க்கப்படுகிறதா?; டி.கே.சிவக்குமாருக்கு குமாரசாமி கண்டனம்

கனகபுரா பெங்களூருவில் சேர்க்கப்படும் என்று கூறியுள்ள துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-24 18:45 GMT

பெங்களூரு:

கனகபுரா பெங்களூருவில் சேர்க்கப்படும் என்று கூறியுள்ள துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

புதிய நாடகம்

ராமநகர் மாவட்டத்தில் உள்ள கனகபுரா தாலுகாவை பெங்களூரு மாவட்டத்தில் சேர்ப்பதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். கனகபுராவை சுற்றியுள்ள தனது சொத்துக்களின் மதிப்பை உயர்த்திக்கொள்ளும் நோக்கத்தில் அவர் இதை கூறியுள்ளார். இதன் மூலம் அவர் புதிய நாடகத்தை ஆரம்பித்துள்ளார்.

டி.கே.சிவக்குமாரின் இந்த முயற்சி ராமநகருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். தன்னால் நேரடியாக பணம் வழங்க முடியாது, வீடுகளை கட்டி கொடுக்க முடியாது என்று கூறியுள்ள டி.கே.சிவக்குமார், இத்தனை ஆண்டுகள் காலமாக அவர் எதற்காக எம்.எல்.ஏ., மந்திரி, துணை முதல்-மந்திரியாக இருந்தார்?. அவர் தனது பாக்கெட்டை நிரப்பி கொண்டார். தனது குடும்பத்தினரை வளர்த்து கொண்டார். கனகபுராவில் இருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில் தான் பெங்களூரு உள்ளது. ஆனால் ராமநகர் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மருத்துவ கல்லூரி

இதில் மக்களுக்கு எது பயனளிக்கும் என்பதை கவனிக்க வேண்டும். கனகபுரா மக்கள் பெங்களூருவுக்கு சென்று அலைந்து திரிய வேண்டுமா?. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது கனகபுராவின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினேன். கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்க நான் முதல்-மந்திரியாக இருந்தபோது அனுமதி வழங்கினேன்.

ஆனால் எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை டி.கே.சிவக்குமார் கவிழ்த்ததால் அந்த திட்டத்தை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. ராமநகர் மாவட்டத்தை உருவாக்கியதே எனது ஆட்சியில் தான். ஆனால் தனது சுயநலத்திற்காக இப்போது ராமநகர் மக்களின் முதுகில் குத்த டி.கே.சிவக்குமார் முயற்சி செய்கிறார். இதை சகித்துக்கொள்ள மாட்டேன். கனகபுரா ராமநகர் மாவட்டத்தில் நீடிக்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்