கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கோசாலை தொடங்கப்படும்-ஐகோர்ட்டில், அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கோசாலை தொடங்கப்படும் என்று ஐகோர்ட்டில் அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
பெங்களூரு:
கோசாலைகள்
கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாக்களிலும் கோசாலை தொடங்கப்பட வேண்டும், அங்கு வளர்க்கப்படும் மாடுகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த மனுவில் கடந்த விசாரணையின் போது கோசாலை விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நடைபெற்றது.
அனைத்து மாவட்டங்களிலும்...
அப்போது அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநிலம் முழுவதும் 77 ஆயிரத்து 75 மாடுகள் உள்ளன. அந்த மாடுகளை பராமரிக்க கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கோசாலை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் கோசாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதுதவிர புதிதாக 70 கோசாலைகளை திறக்கவும், இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.