கோரமங்களா தீ விபத்து: பெங்களூருவில் கேளிக்கை விடுதிகளில் ஆய்வு செய்ய உத்தரவு

கோரமங்களாவில் நடந்த தீ விபத்து சம்பவம் எதிரொலியாக பெங்களூரு நகரில் உள்ள ரெஸ்டாரண்டுகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-19 18:45 GMT

பெங்களூரு-

கோரமங்களாவில் நடந்த தீ விபத்து சம்பவம் எதிரொலியாக பெங்களூரு நகரில் உள்ள ரெஸ்டாரண்டுகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாக போலீஸ்  மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

பரமேஸ்வர் பார்வையிட்டார்

பெங்களூரு கோரமங்களாவில் உள்ள 4-வது மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வந்த கேளிக்கை விடுதியில் நேற்று முன்தினம் தீ விபத்து நடந்தது. தீ விபத்து நடந்த பகுதியை நேற்று காலையில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பார்வையிட்டார்.பின்னர் தீயணைப்பு துறை அதிகாரிகளிடம், தீவிபத்திற்கான காரணம் குறித்து அவர் கேட்டு அறிந்து கொண்டார். அதன்பிறகு, போலீஸ் மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

அதிகாரிகள் அலட்சியம்

பெங்களூரு கோரமங்களா தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். சிலிண்டர்கள் எப்படி வெடித்தது என்பது தெரியவில்லை. சிலிண்டர்கள் வெடித்த போதும், தீயணைப்பு படைவீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருந்தார்கள். இங்கு ஓட்டல் நடத்த மட்டுமே அனுமதி பெற்றுள்ளனர்.

ஆனால் சட்டவிரோதமாக ஹுக்கா பார், கேளிக்கை விடுதி நடத்தி வந்துள்ளனர். ஏற்கனவே அத்திப்பள்ளியில் வெடிவிபத்து நடந்திருந்தது. தற்போது கோரமங்களாவில் தீ விபத்து நடந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள அனைத்து ரெஸ்டாரண்டுகள், கேளிக்கை விடுதிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஓட்டல் நடத்த அனுமதி பெற்றுவிட்டு ஹுக்கா பார் நடத்திய விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஏனெனில் இதுபோன்று அனுமதி வழங்கிய பின்பு அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்திருக்க வேண்டும்.

பட்டாசு வெடிக்க...

ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அதனை செய்ய தவறி விட்டனர். இதுபோன்று தவறு செய்யும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாகவும், உரிய பாதுகாப்பு இன்றியும் செயல்படும் ரெஸ்டாரண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அத்திப்பள்ளி பட்டாசு விபத்திற்கு பின்பு டெல்லி போன்று கர்நாடகத்திலும் பட்டாசு வெடிக்க தடை விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

டி.கே.சிவக்குமாரிடம்  சி.பி.ஐ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கோாட்டில் சரியான தகவல்களையும், பதிலடியையும் டி.கே.சிவக்குமார் அளிப்பார். இந்த வழக்கு பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை. எனவே டி.கே.சிவக்குமாரே சரியான பதில் அளிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்