கோலார் தங்கவயலில் கல்லறை திருநாள் அனுசரிப்பு
கோலார் தங்கவயலில் கல்லறை திருநாள் வருகிற 2-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கல்லறைகளை தூய்மை செய்யும் பணிகள் நேற்று நடந்தது.
கோலார் தங்கவயல்:
கோலார் தங்கவயலில் கல்லறை திருநாள் வருகிற 2-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கல்லறைகளை தூய்மை செய்யும் பணிகள் நேற்று நடந்தது.
கல்லறை திருநாள்
கோலார் தங்கவயலில் ஆண்டு தோறும் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள். இந்த கல்லறை திருநாள் பல ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த கல்லறை திருநாள் கோலார் தங்கவயலில் உள்ள சாம்பியன் ரீப், கோரமண்டல், மாரிகுப்பம், ரோட்ஜஸ் கேம்ப், ராபர்ட்சன்பேட்டை, பாரண்டஹள்ளி, பி.இ.எம்.எல்.நகர் ஆகிய இடங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கல்லறை திருநாள் வருகிற 2-ந் தேதி (நவம்பர் மாதம்) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கல்லறைகள் உள்ள இடங்களை தூய்மை செய்யும் பணிகள் ஈடுபட்டது. ஏற்கனவே அந்த இடங்களில் குப்பை கழிவுகள் காணப்பட்டதால் பொதுமக்கள் இதுகுறித்து கவுன்சிலர் மோனிஷா ரமேஷிற்கு தகவல் அளித்தனர். அவர் உடனே அந்த குப்பை கழிவுகளை அகற்றி கொடுப்பதாக உறுதி அளித்தார்.
குப்பை கழிவுகள் அகற்றம்
அதன்படி நேற்று கல்லறைகள் உள்ள இடங்களில் தூய்மை பணிகள் தொடங்கியது. இதற்காக ஏராளமான தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து முள்ளுகள் மற்றும் செடிகள் அகற்றப்பட்டு தூய்மை செய்து கொடுக்கப்பட்டது. இது தவிர வழக்கம்போல கல்லறைகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இரு மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இந்த கல்லறை திருநாளை அனுசரிப்பதால், இது ஒரு திருவிழா போன்று காட்சியளிக்கும்.
இந்தநிலையில் கல்லறைகளை தூய்மை செய்து கொடுத்த கவுன்சிலர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.