5,675 புதிய பஸ்கள் வாங்க கர்நாடக அரசு முடிவு
மாநிலத்தில் சக்தி திட்டத்திற்கு மக்கள் வரவேற்பு அளித்திருப்பதால் 5,675 புதிய பஸ்கள் வாங்கும் பணியை தீவிரப்படுத்துங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
மாநிலத்தில் சக்தி திட்டத்திற்கு மக்கள் வரவேற்பு அளித்திருப்பதால் 5,675 புதிய பஸ்கள் வாங்கும் பணியை தீவிரப்படுத்துங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
சக்தி திட்டத்திற்கு வரவேற்பு
பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்க ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது முதல்-மந்திரி சித்தராமையா, அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்கு மக்கள் அமோக ஆதரவும், வரவேற்பும் தெரிவித்து வருகிறார்கள். அரசு பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது, என்று கூறினார்.
5,675 புதிய பஸ்கள்
தொடர்ந்து முதல்-மந்திரி சித்தராமையா பேசுகையில், 'சக்தி திட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளித்து வருவதால் போக்குவரத்து கழகங்களுக்கு தேவையான புதிய பஸ்கள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக 5,675 பஸ்களை வாங்குவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும். அந்த பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து கழகங்களுக்கு தேவையான 5,675 புதிய பஸ்களை வாங்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்க வேண்டும்', என்றார்.
மேலும் போக்குவரத்து துறைக்கு கிடைத்துள்ள வருவாய், வரி உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளுடன் சித்தராமையா ஆலோசித்தார். அப்போது விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையின் போது விதிக்கப்பட்ட அபராதம் காரணமாக ரூ.83 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையாவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.