கன்னட நடிகர்கள் புலி நகங்களை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்

கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கன்னட நடிகர்கள் தர்ஷன், நிகில் குமாரசாமி, ஜக்கேஷ் ஆகியோர் தங்களிடம் இருந்த புலி நகங்களை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அது உண்மையானதா என கண்டறிய வனத்துறையினர் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Update: 2023-10-26 22:20 GMT

பெங்களூரு:-

தனியார் நிகழ்ச்சி

கர்நாடகத்தில் தனியார் தொலைக்காட்சி சார்பில் பிக்பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோ நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்ட வர்த்தூர் சந்தோஷ் என்பவர் புலி நகம் கொண்ட சங்கிலியை அணிந்திருந்தார். இதுதொடர்பாக அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது அது உண்மையான புலிநகம் தான் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே நடிகர்கள் ஜக்கேஷ், தர்ஷன், நிகில் குமாரசாமி (முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மகன்), நடிகர் ரஜினிகாந்தின் லிங்கா படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்டோரும் புலி நகரங்கள் கொண்ட சங்கிலிகளை அணிந்திருந்தது தொடர்பான புகைப்படங்கள் வைரலாக பரவியது.

மேலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் ராஜராஜேஸ்வரிநகரில் உள்ள தர்ஷன் வீடு, மல்லேசுவரத்தில் உள்ள நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான ஜக்கேசின் வீடு, ராஜாஜிநகரில் உள்ள தயாரிப்பாளர் வீடு, ஜே.பி.நகரில் உள்ள நிகில் குமாரசாமி வீடு உள்ளிட்ட இடங்களில் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

புலித்தோல்

அப்போது நடிகர் ஜக்கேஷ் வீட்டில் இருந்து புலி நகத்துடன் கூடிய சங்கிலி மீட்கப்பட்டது. இதேபோல் புலித்தோல் வைத்திருந்ததாக எழுந்த புகாரின்பேரில் சிக்கமகளூருவை சேர்ந்த வினய் குருஜியின் ஆசிரமத்தை வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தன்னிடம் இருந்த புலித்தோலை கடந்த 2022-ம் ஆண்டு வனத்துறையிடம் கொடுத்துவிட்டதாக வினய்குருஜி கூறி இருந்தார்.

இந்த நிலையில் நடிகர்கள் ஜக்கேஷ், தர்ஷன், நிகில் குமாரசாமி ஆகியோர் தங்களிடம் இருந்த புலி நகங்களை வனத்துறையிடம் ஒப்படைத்துவிட்டனர். அவற்றை தடயவியல் ஆய்விற்கு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். அவை உண்மையான புலி நகம் என்பது உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

பா.ஜனதா பிரமுகர்

கர்நாடக மாநில விதை மற்றும் உரசான்றிதழ் அமைப்பின் முன்னாள் தலைவரும், பா.ஜனதா பிரமுகருமான விஜுகவுடா பட்டீலின் மகன் சாஷ்வத்கவுடா ஆவார். இவர் தனது கழுத்தில் புலி நகத்துடன் கூடிய சங்கிலியை அணிந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதுதொடர்பான புகைப்படங்கள் வைரலானது.

மேலும் புகார்கள் எழுந்த நிலையில் விஜயாப்புராவில் உள்ள சாஷ்வத்கவுடாவின் வீட்டில் வனத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து புலி நகங்களை பறிமுதல் செய்தனர். அதனை மீட்டு தடயவியல் ஆய்வகத்திற்கு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

அடுத்தகட்ட நடவடிக்கை

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி சிவசரணய்யா கூறுகையில், பா.ஜனதா பிரமுகரின் மகன் சாஷ்வத்கவுடாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது புலி நகங்கள்பறிமுதல் செய்யப்பட்டது. அது டேராடூனில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.சோதனை முடிவு வந்த பிறகு தான், அந்த புலி நகம் உண்மையானதா? அல்லது போலியா? என்பது குறித்து தெரியும். உண்மை என தெரியும் பட்சத் தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்