ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு புதிய தேசிய தலைவரை நியமிப்போம்-சி.எம்.இப்ராகிம் பேட்டி

ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு புதிய தேசிய தலைவரை நியமிப்போம் என்று சி.எம்.இப்ராகிம் கூறினார்.

Update: 2023-10-25 21:24 GMT

பெங்களூரு:-

பா.ஜனதாவுடனான கூட்டணியை எதிர்த்ததால் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சி.எம்.இப்ராகிம் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வெற்றி பெற முடியாது

நாடாளுமன்ற தேர்தலில் 3 தொகுதிக்காக தேவேகவுடாவை பா.ஜனதாவிடம் குமாரசாமி அடமானம் வைத்துள்ளார். இது வேண்டாம். வாஜ்பாய் ஆதரவு கொடுக்கிறேன் என்று கூறியும் பிரதமர் பதவியை உதறி தள்ளியவர் தேவேகவுடா. அதனால் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று நான் தேவேகவுடாவை கேட்டுக் கொள்கிறேன். தனித்து போட்டியிட்டாலும் 3 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு பலம் உள்ளது.

ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. ஜனதா தளம் (எஸ்) கட்சியின் அனைத்து மாநில நிர்வாகிகளும் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் கேரளா, மராட்டியம், பீகார் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். நாளை (இன்று) அந்த கூட்டம் நடக்கிறது. எங்களுடையது தான் உண்மையான ஜனதா தளம் (எஸ்) கட்சி.

நீக்க மாட்டோம்

மகன்களின் பேச்சை கேட்டு கட்சியை பாழாக்க வேண்டாம் என்று தேவேகவுடாவுக்கு கூறுகிறேன். பா.ஜனதாவுடன் கூட்டணி குறித்து நான் முன்கூட்டியே தேவேகவுடாவிடம் கேட்டேன். அதற்கு அவர், அவ்வாறு எந்த திட்டமும் இல்லை என்று என்னிடம் கூறினார். தேவேகவுடா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால், நாங்கள் கட்சிக்கு புதிய தேசிய தலைவரை நியமிப்போம்.

நாங்கள் தேவேகவுடாவை நீக்க மாட்டோம். ஆனால் தவிா்க்க முடியாத சூழ்நிலையில் வேறு தலைவரை நியமனம் செய்வோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) இணைந்துள்ளது என்று அறிவிக்க குமாரசாமி யார்?. அவர் எம்.எல்.ஏ. மட்டுமே.

இவ்வாறு சி.எம்.இப்ராகிம் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்