டி.கே.சிவக்குமாருடன் மோதல் இருப்பது உண்மை தான்; மந்திரி சதீஸ் ஜார்கிகோளி ஒப்புதல்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ெவற்றி ெபற டி.கே.சிவக்குமார் மட்டும் காரணமில்லை என்றும், அவருடன் மோதல் இருப்பது உண்மை தான் என்றும் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு:
கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி சதீஸ் ஜார்கிகோளி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
என்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க் களை மைசூரு தசராவுக்கு அழைத்து செல்ல முடிவு செய்திருந்தேன். சாதாரண சுற்றுப்பயணத்திற்கு தான் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் நான் எனது பலத்தை நிரூபிக்க போவதாக பத்திரிகைகளில் தகவல் பரவி விட்டது. முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேட்டு கொண்டதால் மைசூருவுக்கு சுற்றுப்பயணம் செய்வதை தவிர்த்துள்ளேன். என்றாலும், வரும் நாட்களில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
எனக்கும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கும் இடையே மோதல் இருப்பது உண்மை தான். இது சட்டசபை தேர்தலுக்கும் முன்பு இருந்து இருக்கிறது. இந்த மோதலை சரி செய்ய சாத்தியமில்லை. மாறாக கட்டுப்பாட்டில் இருக்கும்படி செய்து கொள்ளலாம். எனக்கான சக்தி, அரசியல் பலம் இருப்பதை இப்போது கூட காட்டி இருக்கிறேன். மந்திரி பதவி கிடைத்துள்ளது, காங்கிரஸ் செயல் தலைவராக இருக்கிறேன்.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு டி.கே.சிவக்குமார் மட்டுமே காரணம் இல்லை. இதில் காங்கிரஸ் தலைவர்களின் அனைவரின் உழைப்பும் இருக்கிறது. பெலகாவிக்கு டி.கே.சிவக்குமார் வந்த போது, நான் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களும் செல்லவில்லை. அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் என்னால் கலந்துகொள்ள முடியாது என்பதை முதலிலேயே தெரிவித்து இருந்தேன்.
மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் எதற்காக செல்லவில்லை என்பதை, அவரிடம் தான் கேட்க வேண்டும். பெலகாவி அரசியலில் சிறு, சிறு பிரச்சினைகள் இருக்க தான் செய்கிறது. அது சரி செய்யப்படும். பெலகாவி எங்களது கோட்டை ஆகும். அதில் யாராலும் சிறிய விரிசல் ஏற்படுத்தவும் சாத்தியமில்லை. எங்களது கோட்டையை தகர்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.