காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீவிர போராட்டம்

காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீவிர போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-10-14 21:51 GMT

மண்டியா:-

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள அணைகள் உள்பட மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பவில்லை. இருப்பினும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு காவிரியில் 16-ந் தேதி(நாளை) முதல் வருகிற 31-ந் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு விவசாய சங்கத்தினர், கன்னட அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டம்

மண்டியா டவுனில் உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா சிலை அருகே கர்நாடக மாநில விவசாய சங்கத்தினர் கடந்த 40 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று அவர்களது போராட்டம் 41-வது நாளாக தொடர்ந்து நடந்தது. போராட்டத்தின்போது அவர்கள் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக தண்ணீர் திறப்பை நிறுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதற்கிடையே காவிரி நதிநீர் பாதுகாப்பு அமைப்பினர் மண்டியா டவுன் சர் எம்.விசுவேஸ்வரய்யா சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகிய இரண்டையும் உடனடியாக கலைத்திட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மண்டியாவில் பதற்றம்

மேலும் தமிழகத்திற்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறப்பதை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்தின் நிலையை முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் கர்நாடக எம்.பி.க்கள் எடுத்துரைக்க கோரியும் கோஷமிட்டனர். இதற்கிடையே மண்டியா டவுனில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப்போக்கை கண்டித்தும், ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும் தீவிர போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.

இந்த போராட்டத்திற்கு மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கத்தினர், கன்னட அமைப்பினர் உள்ளிட்ட போராட்ட குழுவினர், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் ஆதரவு தர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. காவிரி போராட்டம் தீவிரமடைவதால் மண்டியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்