பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 50 இடங்களில் வருமான வரி சோதனை

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 50 இடங்களில் தொழில் அதிபர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது.;

Update: 2022-06-01 16:15 GMT

பெங்களூரு:

வரி ஏய்ப்பு

கர்நாடகத்தில் வசித்து வரும் தொழில் அதிபர்கள் ஆண்டுதோறும் வருமான வரி மற்றும் வணிக வரி கணக்குகளை வருமான, வணிக வரித்துறை அலுவலகங்களில் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் சில தொழில் அதிபர்கள் வருமான, வணிக வரிகளை முறையாக செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும், வருமானத்தை குறைத்து காட்டுவதாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றது.

இதுகுறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்திய போது சில தொழில் அதிபர்கள் வருமான வரி செலுத்துவதில் மோசடி செய்து வந்தது தெரியவந்தது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருந்ததும் தெரியவந்தது. இதனால் வரி செலுத்துவதில் மோசடி செய்யும் தொழில் அதிபர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்து இருந்தனர். மேலும் சோதனை நடத்துவதற்காக கோர்ட்டில் இருந்து அனுமதியும் பெற்று இருந்தனர்.

50 இடங்களில் சோதனை

இந்த நிலையில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழில் அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் கர்நாடகம் மற்றும் கோவாவை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர். பெங்களூருவில் மட்டும் 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். மாநிலம் முழுவதும் நடந்த சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 600 பேர் ஈடுபட்டு இருந்தனர்.

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள எம்பசி ஆர்சிட் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜித்து விர்வானி, அந்த குழுமத்துடன் தொடர்பில் இருக்கும் நர்பத்சிங் ஆகியோரின் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது தொழில் அதிபர்களின் வீடு, அலுவலகங்களில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் வருமான வரித்துறையினருக்கு கிடைத்து இருப்பதாகவும், அதை அவர்கள் கைப்பற்றி எடுத்து சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்