மைசூருவில் மலர்கண்காட்சி

மைசூரு தசரா விழாவையொட்டி நடந்த மலர்கண்காட்சியை 3 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.

Update: 2023-10-26 18:45 GMT

மைசூரு:

மைசூரு தசரா விழாவையொட்டி நடந்த மலர்கண்காட்சியை 3 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.

மைசூரு தசரா விழா

மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி கொண்டாடப்பட்டு வருகிறது. அதேப்போல் இந்த ஆண்டு கடந்த 15-ந் தேதி 24-ந் தேதி வரை தசரா விழா நடந்தது. கடைசி நாளில் ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் தசரா விழா நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் தங்க அம்பாரியை சுமந்து சென்ற அபிமன்யு யானையை கண்டு ரசித்தனர்.

இந்தநிலையில், தசரா விழாவில் கலந்து கொண்ட யானைகள் நேற்று முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனாலும் மைசூருவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறையவில்லை. மைசூரு தசரா விழாவிற்கு சுற்றுலா பயணிகள் மைசூரு அருகே உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்கிறார்கள். பின்னர் மைசூருவுக்கு திரும்புகிறார்கள். இதனால் மைசூரு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள்

மைசூரு வரும் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் மைசூரு நகரை கண்டு ரசிக்கிறார்கள். மேலும் குப்பண்ணா பூங்காவில் உள்ள அமைக்கப்பட்டுள்ள மலர்கண்காட்சியை கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்த வந்த ஏராளமானோர் வந்து பார்த்துவிட்டு செல்கிறார்கள். மலர்கண்காட்சி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மலர் கண்காட்சி நேற்றுமுன்தினத்துடன் நிறைவடைந்தது. கடந்த 15-ந்தேதி மலர்கண்காட்சி தொடங்கப்பட்டது. அதாவது 11 நாட்கள் மலர் கண்காட்சி நடந்துள்ளது. மலர்கண்காட்சியில் கண்ணாடி மாளிகை சுற்றிலும் பல்வேறு வகையான பூக்களை வைத்து அழகாக செய்யப்பட்டு இருந்தது.

கண்ணாடி மாளிகை

கண்ணாடி மாளிகையின் வெளிப்பகுதியில் பூங்காவில், துர்கா தேவி, விநாயகர், குதிரை வண்டிகள், உள்பட பல்வேறு வடிவமைப்புகள் மலர்களால் அலங்கரித்து கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பூசணிக்காய், வெள்ளரிக்காய், வெள்ளை பூசணிக்காய், சாம்பார் போன்றவர்களால் ஆதிவாசி மக்களின் குடிசை உருவாக்கப்பட்டு இருந்தது. இது சுற்றுலா பயணிகளை மனம் கவரும் வகையில் இருந்தது.

மேலும், குழந்தைகள் விளையாட ஃபன் வேர்ல்டு மற்றும் குளிர்பானம், ஐஸ்கிரீம், பல்வேறு வகையான தின்பண்ட கடைகள், அலங்காரப் பொருட்கள், விளையாட்டு பொருட்கள் கடைகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. தோட்டக்கலை சார்பில் 85 ஆயிரம் பூந்தொட்டிகள், 50 ஆயிரம் பூக்களை கொண்டு சாமுண்டீஸ்வரி சிலை, இந்தியா வரைபடம் கிரிக்கெட் பேட் மற்றும் பந்து போன்றவை வெள்ளை ரோஜா பூக்களால் அலங்கரித்து வடிவமைக்கப்பட்டிருந்தது.

மலர் கண்காட்சி

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுவேதா கூறுகையில், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் மலர்கண்காட்சி பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்தது. தசரா முடிந்த பிறகும் சில நாட்கள் மலர் கண்காட்சியை வைக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கை வந்துள்ளது.

இதுகுறித்து அடுத்த ஆண்டு பரிசீலனை செய்யப்படும், என்றார். தோட்டக் கலைத் துறை சார்பில் தொழிற்சாலை மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் இருந்து சிறிய பூங்கா அமைத்து அனுப்பி வைத்திருந்த தோட்டக்கலை ஆர்வலர்களுக்கு குப்பண்ண பூங்காவில் பரிசு வழங்கப்பட்டது.

கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த சந்திரயான்-3 மற்றும் ரோவர் வடிவமைப்புக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்