மைசூருவில், மழையால் பாதிக்கப்பட்ட பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்தது
மைசூருவில், மழையால் பாதிக்கப்பட்ட பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. அப்போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என மைசூரு மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.
மைசூரு:
கனமழையால் பாதிப்பு
மைசூரு (மாவட்டம்) டவுன் அருகே தேவராஜ் அர்ஸ் பகுதியில் இருந்து சிவராம்பேட்டைக்கு செல்லும் சாலையில் பாழடைந்த கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடத்தில் யாரும் வசிப்பதாக தெரியவில்லை. மைசூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் பல பகுதிகளில் மின்கம்பங்கள், வீட்டின் மேற்கூரை ஆகியவை பெயர்ந்து விழுந்தன.
இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென தேவராஜ் அர்ஸ் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் இடிபாடுகளில் சிக்கின. உடனடியாக இதுகுறித்து மைசூரு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அந்த கட்டிடத்தில் யாரும் வசிக்கவில்லை என தெரியவந்தது. இதற்கிடையே தகவல் அறிந்து மைசூரு மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு நடத்தினர். பின்னர், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
200 கட்டிடங்கள்
கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. அந்த சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதேபோல் மைசூரு நகரில் ஏறக்குறைய 200 கட்டிடங்கள் உள்ளன. அவற்றை முறையாக அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், நகரில் உள்ள பாழடைந்த கட்டிடங்களை எண்ணும் பணி தொடங்க உள்ளது. விரைவில் அவற்றை கண்டுபிடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மைசூரு மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பழமையாக கட்டிடம் இடிந்து விழும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அதுதொடர்பாக வீடியோ சமுகவலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.