பலாத்கார வழக்கில் அரசு ஊழியருக்கு சிறப்பு கோர்ட்டு வழங்கிய ஜாமீன் ரத்து

பலாத்கார வழக்கில் அரசு ஊழியருக்கு சிறப்பு கோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-10-13 18:45 GMT

பெங்களூரு:

பலாத்கார வழக்கில் அரசு ஊழியருக்கு சிறப்பு கோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிறுமி பலாத்காரம்

மண்டியாவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 9-ம் வகுப்பு படிக்கும் மகள் இருந்தாள். அந்த சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் தனிமையில் அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் கூறி மிரட்டி உள்ளார். மேலும் 18 வயது நிரம்பியதும் திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார். அதை நம்பிய சிறுமி இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளாள். இதனை பயன்படுத்தி, அரசு ஊழியர் அந்த சிறுமியை பல ஆண்டுகளாக தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு சிறுமி கர்ப்பமானாள். இதையடுத்து சிறுமியை மண்டியாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்தார். 18 வயது பூர்த்தி ஆன நிலையில் 2021-ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் சிறிது நாட்கள் கழித்து, அரசு ஊழியர் திருமணம் செய்ய மறுத்தார்.

மேல் முறையீடு

இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அரசு ஊழியரை கைது செய்தனர். இதற்கிடையே மண்டியா சிறப்பு கோர்ட்டில் அரசு ஊழியர் ஜாமீன் பெற்றார். இதுகுறித்து அறிந்த அந்த பெண், அரசு ஊழியருக்கு சிறப்பு கோர்ட்டில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி பெங்களூரு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதில், தன்னை பலாத்காரம் செய்து கைதான அரசு ஊழியருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது ஐகோர்ட்டு நீதிபதி கூறுகையில், பலாத்கார வழக்குகளில் பாதிக்கப்பட்டவருக்கு தகவல் கொடுக்காமல், எதிர் தரப்பினருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்றார். மேலும் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்