மந்திரி சதீஸ் ஜார்கிகோளிக்கு தொந்தரவு- ரமேஷ் ஜார்கிகோளி பேச்சு

சித்தராமையா முதல்-மந்திரியாக இருக்கும்போதே மந்திரி சதீஸ் ஜார்கிகோளிக்கு தொந்தரவு கொடுக்கப்படுகிறது என்று ரமேஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார்.

Update: 2023-10-24 21:52 GMT

பெங்களூரு:-

போர்க்கொடி தூக்கினேன்

பொதுப்பணித்துறை மந்திரி சதீஸ் ஜார்கிகோளிக்கும், பெண்கள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெலகாவி மாவட்ட அரசியலில் லட்சுமி ஹெப்பால்கருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் சதீஸ் ஜார்கிகோளி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் மைசூருவுக்கு சுற்றுலா வர திட்டமிட்டார். இதற்கு காங்கிரஸ் தடை விதித்தது. இந்த நிலையில் இதுகுறித்து சதீஸ் ஜார்கிகோளியின் சகோதரரும், முன்னாள் மந்திரியுமான ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. பெலகாவியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

நான் காங்கிரசில் இருந்தபோது போர்க்கொடி தூக்கினேன். அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு இன்று பதில் கிடைத்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாக இருக்கும்போதே, சதீஸ் ஜார்கிகோளிக்கு தொந்தரவு அளிக்கப்படுகிறது. ஒருவேளை அவர் முதல்-மந்திரி பதவியில் இல்லாமல் இருந்தால் அவரின் நிலை என்னவாகி இருக்கும்?.

அடிக்கடி சந்திக்கிறேன்

சித்தராமையா சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையில் உள்ளார். அவரை சிலர் கட்டுப்படுத்துகிறார்கள். கடந்த 2013-ம் ஆண்டு இருந்த சித்தராமையா இப்போது இல்லை. அவரது இயல்பான பேச்சு, நடையை தற்போது பார்க்க முடியவில்லை. அவர் அமைதியாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. சித்தராமையா மீது மரியாதை உள்ளது.

ஜெகதீஷ் ஷெட்டர் மீது எனக்கு மரியாதை உள்ளது. அவர் எந்த கட்சியில் இருந்தாலும் அவர் மூத்த தலைவர் தான். அவரை அடிக்கடி சந்திக்கிறேன். ஆனால் இந்த முறை நான் அவரை சந்தித்த சந்திப்பு தான் பகிரங்கமாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை நான் அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. அவர் பா.ஜனதாவை விட்டு விலகி இருக்கக்கூடாது.

இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்