காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டத்தில் முறையீடு-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-12 21:52 GMT

பெங்களூரு:-

3 ஆயிரம் கனஅடி நீர்

காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது.

இந்த விவகாரங்கள் குறித்து நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

மத்திய மந்திரியிடம் கோரிக்கை

மாநிலத்தில் மழை பொய்த்து போனதன் காரணமாக மின் உற்பத்தி குறைந்துள்ளது. மின் உற்பத்தி குறைந்திருப்பதால் மின்தடையை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் 2 மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. மின்வெட்டு பிரச்சினையை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி சென்று மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மத்திய மந்திரியை சந்தித்து, கர்நாடகத்திற்கு மின்சாரம் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனால் மத்திய அரசிடம் இருந்தும் கர்நாடகத்திற்கு கூடிய விரைவில் மின்சாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தபோது 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. பா.ஜனதா ஆட்சியில் மின் உற்பத்தியின் மீது கவனம் செலுத்தவில்லை. தற்போதைய மின்வெட்டுக்கு பா.ஜனதாவும் காரணமாகும்.

கூடிய விரைவில் தீர்வு

மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்ட தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. மக்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். மின்உற்பத்தி செய்ய தண்ணீர் தேவையாகும். அதே நேரத்தில் நிலக்கரி தட்டுப்பாடும் உள்ளது. மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும். சோலார் மின் பூங்கா உள்ளிட்ட மாற்று திட்டங்களை செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு வருகிற 31-ந் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு மீண்டும் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. அங்குள்ள அணைகளுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. எனவே கர்நாடக விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும்.

மேல் முறையீடு

காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டத்தில் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, கர்நாடக தரப்பு வாதங்களை முன் வைத்திருந்தனர். தமிழக அதிகாரிகளும் தண்ணீர் திறந்து விடும்படி வாதிட்டுள்ளனர். இறுதியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே பெய்துள்ளது. அங்குள்ள 50 தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. இதுபோன்ற கஷ்டமான சந்தர்ப்பத்தில் ஒரு சொட்டு நீரை கூட தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறந்து விடுவதற்கு சாத்தியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்