கர்நாடகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்; கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேச்சு
கர்நாடகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கவர்னர் தாவர்சந்த் கெலாட் கூறினார்.;
பீதர்:
கர்நாடகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கவர்னர் தாவர்சந்த் கெலாட் கூறினார்.
கால்நடை நோய்கள்
பீதரில் உள்ள கர்நாடக கால்நடை, மீன்வள மருத்துவ கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசும்போது கூறியதாவது:-
நவீன யுகத்தில் அறிவியல் நடைமுறைகள் மூலம் கால்நடைகளுக்கு வரும் நோய்களை கண்டுபிடித்து அவற்றை குணமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். விலங்குகள் நிபுணர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். அதன் மூலம் பால் உற்பத்தியை தொழிலாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
டாக்டர்களை உருவாக்கும்
இந்தியா அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் உள்ளது. விவசாய பொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பது, விவசாயிகளின் வருவாயை பெருக்குவது, அறிவாற்றலை அதிகரிப்பது, இயற்கை வளங்களை பயன்படுத்துவது, உயிரினங்களை காப்பது, சுற்றுச்சூழல் மாற்றத்தை தடுப்பது உள்ளிட்ட அம்சங்களை கவனத்தில் வைத்து விவசாய தொழிலை வளர்க்க வேண்டும்.
கால்நடை மருத்துவம், கால்நடை வளர்ச்சி, பால் உற்பத்தி, மீன்வளத்திற்கு அறிவியல் மற்றும் கிராமங்களை அடிப்படையாக கொண்ட தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் கல்வி, கலாசாரத்திற்கு பெயர் பெற்ற பீதரில் இந்த பல்கலைக்கழகம் இருப்பது பொருத்தமானது. இந்த பல்கலைக்கழகம் கற்பித்தல், பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தின் மூலம் நல்ல கால்நடை டாக்டர்களை உருவாக்கும் பணியை செய்கிறது.
இவ்வாறு தாவர்சந்த் கெலாட் கூறினார்.