கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கோவில்கள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

தொடர் கனமழை எதிரொலியால் கபிலா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரையையொட்டிய கோவில்கள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2022-07-12 17:46 GMT

மைசூரு:

கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மலைநாடு, கடலோர மற்றும் வடகர்நாடக மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. தொடர் மழைக்கு கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 425 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கபினி அணையில் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கபிலா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கபிலா ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் புகுந்தது

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நஞ்சன்கூடு டவுன் அருகே கபிலா ஆற்றங்கரை ஒட்டியுள்ள அய்யப்பன் கோவில், பரசுராமர் கோவில் வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கோவில்களில் கழிவறை, முடி எடுக்கும் இடம் உள்ளிட்டவை மழை நீரில் மூழ்கியுள்ளது. மேலும் கபிலா ஆற்றில் நஞ்சுண்டேஸ்வரரின் தெப்ப உற்சவம் நடக்கும் 16 தூண் மண்டபமும் மூழ்கியது.

நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அருகே அள்ளதகேரி பகுதிக்குள் நீர் புகுந்தது. இதனால் அங்குள்ள சில வீடுகளுக்குள் தண்ணீர் தஞ்சமடைந்தது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அவர்கள், வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றுவதில் சிரமப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்