மளிகை கடையில் தீவிபத்து; பொருட்கள் எரிந்து நாசம்
சிவமொக்காவில் மின்கசிவால் மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது.;
சிவமொக்கா:
சிவமொக்கா டவுன் நாகேந்திர காலனி பகுதியில் சதானந்தா என்பவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அவரது மளிகைக்கடையில் தீடிரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சதானந்தா, கடையில் பிடித்து எரிந்த தீயை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அணைக்க முயன்றார். ஆனாலும் தீகொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் பக்கத்தில் இருந்த ஓட்டலிலும் தீப்பிடித்து மேஜை, நாற்காலிகள் எரிந்தன. தகவல் அறிந்த சிவமொக்கா டவுன் போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து கடை, ஓட்டலில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கடை, ஓட்டலில் பற்றி எரிந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். ஆனாலும் கடை, ஓட்டலில் இருந்த மளிகைப்பொருட்கள், குளிர்சாதனபெட்டி உள்ளிட்டவை எரிந்து நாசமானது. இதன் மொத்த மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும். விசாரணையில், மளிகை கடையில் மின்கசிவு
ஏற்பட்டதில் தீப்பிடித்தது தெரியவந்தது. இந்த தீவிபத்து குறித்து சிவமொக்கா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.