கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து

பெங்களூருவில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உயிர் தப்பிக்க 4-வது மாடியில் இருந்து குதித்த தொழிலாளி படுகாயம் அடைந்தார்.;

Update:2023-10-19 03:26 IST

பெங்களூரு:

பெங்களூருவில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உயிர் தப்பிக்க 4-வது மாடியில் இருந்து குதித்த தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

கேளிக்கை விடுதியில் தீ விபத்து

பெங்களூரு சுத்தகுண்டே பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோரமங்களா அருகே தாவரகெரே மெயின் ரோட்டில் பிரபல வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகம் எதிரே அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. 4 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்தின் தரை தளத்தில் ஒரு கார் ஷோரூம், மற்ற 2 தளங்களில் முறையே ரெஸ்டாரண்டு மற்றும் ஹுக்கா பார் செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தின் 4-வது மாடியில் ஒரு பப் (கேளிக்கை விடுதி) உள்ளது.

அந்த கேளிக்கை விடுதி தினமும் மதியம் 12 மணிக்கு மேல் தான் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலையில் கேளிக்கை விடுதியில் உள்ள சமையல் அறையில் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. அங்கிருந்த பொருட்களிலும் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் சிலர் வெளியே ஓடிவந்து உயிரை காப்பாற்றி கொண்டனர். ஒரு தொழிலாளி மட்டும் தீவிபத்து நடந்த கேளிக்கை விடுதிக்குள் சிக்கி கொண்டார்.

4-வது மாடியில் இருந்து...

தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதை தொடர்ந்து அந்த தொழிலாளியும் தன்னுடைய உயிரை காப்பாற்றி கொள்ள 4-வது மாடியில் உள்ள திறந்தவெளி பகுதிக்கு ஓடி சென்று சுவரில் ஏறி கீழே குதித்தார். இதில், அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் கேளிக்கை விடுதியில் பிடித்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள்.

மேலும் மற்ற தளங்களுக்கும் தீ பரவாமல் பார்த்து கொண்டனர். அத்துடன் மற்ற தளங்களில் இருந்தவர்களையும் தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக வெளியேற்றினார்கள். 4-வது மாடியில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள், சிமெண்டு சீட்டுகள் தீயில் எரிந்து கீழே விழுந்ததால், தரை தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களும், ஒரு காரும் உடைந்து சேதம் அடைந்தன.

சிலிண்டர்கள் வெடித்தன

இந்த தீவிபத்து பற்றி தகவல் அறிந்ததும் சுத்த குண்டேபாளையா போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது 4-வது மாடியில் இருந்து கீழே குதித்த தொழிலாளியின் பெயர் பிரேம் என்றும், நேபாளத்தை சேர்ந்தவர் என்பதும், கேளிக்கை விடுதியில் அவர் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது.

இந்த தீவிபத்தில் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்து காரணமாக 4-வதுமாடியில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. அங்கு வைக்கப்பட்டு இருந்த 2 சிலிண்டர்கள் தீயில் டமார்... டமார் என வெடித்து சிதறியதால், அதிக சேதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

14 சிலிண்டர்கள் மீட்பு

அங்கு 14-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடிக்காத நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறி இருந்தால் பெரும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்திருக்கும் என கூறப்படுகிறது.

கேளிக்கை விடுதியில் சமையல் செய்த போது கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து தீப்பிடித்து, இந்த விபத்து நடந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுத்தகுண்டே பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர தீவிபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கேளிக்கை விடுதி இருந்த கட்டிடத்தில் தீப்பிடித்து எரிந்த காட்சி, 4-வது மாடியில் இருந்து தொழிலாளி கீழே குதித்த காட்சி அடங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரின் நெஞ்சை பதறவைப்பதாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்