பிரியாவிடை பெற்ற தசரா யானைகள்

மைசூருவில் 50 நாட்கள் தங்கி இருந்த நிலையில் தசரா யானைகளுக்கு நேற்று வழியனுப்பு விழா நடந்தது. அந்த யானைகள் முகாம்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.;

Update:2023-10-27 00:15 IST

மைசூரு:

மைசூருவில் 50 நாட்கள் தங்கி இருந்த நிலையில் தசரா யானைகளுக்கு நேற்று வழியனுப்பு விழா நடந்தது. அந்த யானைகள் முகாம்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

மைசூரு தசரா விழா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடந்தது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் கடந்த 24-ந்தேதி நடந்தது. இதில், சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து கொண்டு அபிமன்யு யானை கம்பீர நடைபோட்டு செல்ல, அதனை தொடர்ந்து மற்ற யானைகள் சென்றன.

இதனை காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த தசரா ஊர்வலத்தை காண லட்சக்கணக்கான மக்கள் மைசூருவில் குவிந்தனர்.

கடந்த 10 நாட்களாக மேலாக கோலாகலமாக நடந்து வந்த தசரா விழா 24-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதனால் அரண்மனை வளாகத்தில் நேற்று தசரா யானைகள் ஓய்வெடுத்தன. கடந்த 50 நாட்களாக நடைபயிற்சி, வெடி சத்த பயிற்சி என பரபரப்பாக காணப்பட்ட யானைகள் நேற்று முன்தினம் அரண்மனையில் ஜாலியாக இருந்தன. யானைகள், ஒன்றுடன் ஒன்று தும்பிக்கைகளை கோர்த்து கொஞ்சி விளையாடின.

வழியனுப்பு விழா

தசரா விழாவில் கலந்துகொள்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி பல்வேறு முகாம்களில் இருந்து யானைகள் மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டன. இந்த நிலையில் தற்போது தசரா விழா முடிவடைந்த நிலையில், அந்த யானைகளுக்கு வழியனுப்பு விழா நேற்று நடந்தது. மைசூரு அரண்மனை வளாகத்தில் இந்த வழியனுப்பு விழா நடந்தது. இதில் தசரா விழாவில் கலந்துகொண்ட 14 யானைகளும் தனித்தனி லாரிகளில் அந்தந்த முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில், கலெக்டர் ராஜேந்திரா, மேயர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு யானைகளை வழியனுப்பி வைத்தனர். யானைகளை வரிசையாக நிற்க வைத்து தும்பிக்கையில் பூக்கள் வைத்தனர். பின்னா் அந்த யானைகள் தும்பிக்கைகளை தூக்கி நன்றி தெரிவித்தன.

பிரியாவிடை

முன்னதாக யானை பாகன்களுக்கு அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. அவர்களின் குழந்தைகளுக்கு பள்ளி சீருடை, புத்தகம் மற்றும் பைகள் வழங்கப்பட்டது. பாகன்கள் ஒருவரையொருவர் கட்டி தழுவி பிரியா விடை கொடுத்தனர். யானைகளும், கண்ணீர் மல்க பிரியா விடை பெற்று சென்றன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து யானைகளை கையசைத்து வழியனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்