வீரசாவர்க்கர், சுதந்திர போராட்ட வீரர்தான் என்று ஆதாரத்தை காண்பிக்க வேண்டும்-பி.கே. ஹரிபிரசாத் பேட்டி
வீரசாவர்க்கர், சுதந்திர போராட்ட வீரர்தான் என்று ஆதாரத்தை காண்பிக்கவேண்டும் என்று பி.கே.ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.;
மைசூரு:
கர்நாடக மேல்-சபையின் எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், மைசூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாநிலத்தில் ஆட்சி நிர்வாகம் இடிந்து விழுந்துள்ளது. கர்நாடக அரசு அனைத்து துறையிலும் பலனின்றி இருக்கிறது, பா.ஜனதாவினர், உண்மையான வரலாற்றை மறைத்து வீரசாவர்க்கரை சுதந்திர போராட்ட வீரர் என்று பிரசாரம் செய்து வருகிறார்கள். வீரசாவர்க்கர் சுதந்திர போராட்ட வீரர் அல்ல. அந்தமான் சிறையில் இருந்து விடுவிக்கும்படி மன்னிப்பு கோரியவர். வீரசாவர்க்கர், ஆங்கிலேயருக்கு எதிராக போராட்ட நடத்திய ஆதாரம் இருந்தால் காண்பிக்க வேண்டும். வீரசாவர்க்கர் ஒரு நாஸ்திகர். அவரது புகைப்படத்தை விநாயகர் சதுர்த்தி விழாவில் வைத்து இந்து மதத்தை அவமானம் செய்ய முயற்சிக்கின்றனர்.
50 சதவீதம் கமிஷன் பெற்று பா.ஜனதா பணக்கார கட்சி ஆகியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமாரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் இச்சோடோ பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பாதயாத்திரை முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத ஆட்சி பற்றி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இவருடன் மாநில காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஆர்.துருவநாராயண் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் இருந்தனர்.