எத்தினஒலே கூட்டு குடிநீர் திட்டம் விரைந்து முடிக்கப்படும்: மந்திரி சுதாகர் தகவல்
எத்தினஒலே கூட்டு குடிநீர் திட்டம் விரைந்து முடிக்கப்படும் என்றும், இதற்காக கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் மந்திரி சுதாகர் கூறினார்.
கோலார் தங்கவயல்:
சிக்பள்ளாப்பூரில் நேற்று மத்திய மாநில அரசுகளின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மந்திரி சுதாகர் கலந்துகொண்டு பேசுகையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தல்
மத்திய, மாநில அரசுகள் மக்களின் வளர்ச்சிப் பணிகளை சிறப்பான முறையில் செய்து சாதனை படைத்து வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்று மீண்டும் பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி ஆவது உறுதி.
அதேபோல மத்தியிலும் அடுத்து நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும். நரேந்திரமோடி மீண்டும் பிரதமர் ஆவார். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது தொகுதியை தன்னுடைய மகனுக்கு விட்டுக் கொடுத்துள்ளார். இது அவரது சொந்த விருப்பமாகும். அவரை தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று யாரும் கூறவில்லை.
எத்தினஒலே கூட்டு குடிநீர் திட்டம்
சிக்பள்ளாப்பூர்-கோலார் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கடந்த ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் குடிநீர் திட்டப்பணிகளை முடிக்க முடியவில்லை. இதனால், எத்தினஒலே கூட்டு குடிநீர் திட்டத்திற்கு பா.ஜனதா ஆட்சியில் ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
அந்த நிதியும் போதவில்லை. அதை தொடர்ந்து கடந்த பட்ஜெட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எத்தினஒலே கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கினார். அந்த நிதியின் மூலம் எத்தினஒலே கூட்டு குடிநீர் திட்டம் விரைந்து முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.