தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கும் எடியூரப்பா...!
எடியூரப்பா தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வெளிநாட்டு பயணங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.;
பெங்களூரு:
பதவி ராஜினாமா
கர்நாடக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்பவர் எடியூரப்பா. குறிப்பாக பா.ஜனதாவின் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர். அது மட்டுமல்ல லிங்காயத் சமூகத்தின் முகமாக பார்க்கப்படும் வலுவான தலைவர். இப்படி பலம் பொருந்திய தலைவராக எடியூரப்பா இருக்கிறார். பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டதை அடுத்து வயது மூப்பு காரணமாக எடியூரப்பா கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார். கண்ணீர் மல்க பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவியில் எடியூரப்பாவின் ஆதரவாளர் பசவராஜ் பொம்மை அமர்த்தப்பட்டார்.
முதல்-மந்திரி பதவியை விட்டு விலகிய பிறகு எடியூரப்பா தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே உள்ளார். கட்சியின் செயற்குழு மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அவர் கலந்துகொண்டார். அதை விடுத்து கட்சியின் பிற கூட்டங்களில் அவர் அவ்வளவாக தென்படவில்லை. சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எடியூரப்பா பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். ஆனால் அவரது பிரசாரத்தில் தீவிரத்தன்மை இருந்ததாக தெரியவில்லை.
இங்கிலாந்து பயணம்
முதல்-மந்திரி பதவியில் இருந்து கீழே இறங்கிய பிறகு அவர் தனது குடும்பத்தினருடன் துபாய்க்கு சுற்றுலா சென்றார். சில நாட்கள் அங்கு பொழுதை கழித்த அவர் பிறகு பெங்களூரு திரும்பினார். ஓரிரு மாதங்களுக்கு பிறகு அவர் மீண்டும் துபாய்க்கு
சென்றார். அங்கு நடைபெற்ற பசவ ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டார். அந்த பயணத்தை முடித்து கொண்டு அவர் பெங்களூரு திரும்பினார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எடியூரப்பா தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். அந்த பயணத்தை முடித்துவிட்டு அவர் இன்று (வியாழக்கிழமை) பெங்களூரு திரும்புவார் என்று கூறப்படுகிறது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு வந்திருந்தார். இங்கு நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொள்ளவில்லை. அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அவர் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. கட்சியை மேலும் பலப்படுத்த சுற்றுப்பயணம் செய்வேன் என்று எடியூரப்பா கூறி வருகிறார். ஆனால் இதுவரை அவர் அந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவில்லை.
எதிர்க்கட்சிகளுக்கு வரப்பிரசாதம்
தனது மகன் விஜயேந்திராவுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், அதற்கு வசதியாக அவரை எம்.எல்.சி. ஆக்க வேண்டும் என்றும் பா.ஜனதா மேலிட தலைவர்களை எடியூரப்பா கேட்டு கொண்டார். குடும்ப அரசியலுக்கு எதிராக வலுவான கருத்தை பிரதமர் மோடி முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில் விஜயேந்திராவுக்கு மந்திரி பதவி வழங்கினால் பா.ஜனதாவை விமர்சிக்க அது எதிர்க்கட்சிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிடும் என்பதால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன்காரணமான அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி மனதை புத்துணர்வாக வைக்க வெளிநாட்டு பயணிகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.