தசரா யானைகள், மைசூரு அரண்மனைக்கு வந்தன சிறப்பு பூஜைகளுடன் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு
சிறப்பு பூஜைகளுடன் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து தசரா யானைகள், மைசூரு அரண்மனைக்கு நேற்று வந்தன.;
மைசூரு:
மைசூரு தசரா விழா
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடக்கும் தசரா விழா உலக புகழ் பெற்றது. ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி என்னும் யானைகள் ஊர்வலம் நடக்கும். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டு கொரோனா கட்டுக்குள் உள்ளதால் தசரா விழாவை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் தசரா விழா நடக்கிறது. தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு மற்றும் பீமா, கோபாலசாமி, அர்ஜூனா, விக்ரமன், தனஞ்ஜெயா, காவேரி, கோபி, விஜயா, சைத்ரா, லட்சுமி, பார்த்தசாரதி, ஸ்ரீராமா, மகேந்திரா ஆகிய 14 யானைகள் தேர்வு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக அபிமன்யு, அர்ஜூனா, காவேரி, தனஞ்ஜெயா, பீமா, கோபாலசாமி, மகேந்திரா உள்ளிட்ட 9 யானைகள் முகாம்களில் இருந்து மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா வீரனஒசஹள்ளிக்கு
தனித்தனி லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 7-ந்தேதி, வீரனஒசஹள்ளியில் கஜபயணம் நடத்தி தசரா யானைகள் மைசூரு டவுன் அசோகபுரத்தில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே உள்ள பவனத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்தன.
மைசூரு அரண்மனைக்கு வந்தன
இந்த நிலையில் நேற்று தசரா யானைகள், மைசூரு அரண்மனை வளாகத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் மைசூரு மாவட்ட நிர்வாகம், தசரா கமிட்டி, அரண்மனை வாரியம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை அபிமன்யு உள்பட 9 யானைகளையும், பவனத்தில் வைத்து குளிப்பாட்டி அலங்கரிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பாகன்கள் மேல் அமர்ந்து வர அபிமன்யு முன்செல்ல பின்னால் மற்ற யானைகள் புடை சூழ மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்தன. பின்னர் மைசூரு அரண்மனை ஜெயமார்த்தாண்டா நுழைவு வாயில் முன்பு வந்த தசரா யானைகளை ஒரேவரிசையில் நிற்கவைக்கப்பட்டன. இதைதொடர்ந்து 9 யானைகளுக்கும் விசேஷ பூஜை செலுத்தி மலர் தூவி சாப்பிடுவதற்கு உணவு கொடுத்து அரண்மனை வளாகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பின்னர் கோட்டை அருகில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஷெட்டுகளில் யானைகள் தங்கவைக்கப்பட்டன. மேலும் பாகன்கள், குடும்பத்தினரும் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் தங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மந்திரி எஸ்.டி. சோமசேகர், கலெக்டர் பகாதி கவுதம், எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், எல். நாகேந்திரா, பிரதாப் சிம்ஹா எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர். இனிவரும் நாட்களில் மேலும் 5 யானைகளையும் வரவழைத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.