குடும்ப கஷ்டம் தீர பூஜை செய்வதாக ரூ.20 லட்சம் நகைகள் அபேஸ்

உடுப்பியில் குடும்ப கஷ்டம் தீர பூஜை செய்வதாக கூறி ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகளை அபேஸ் செய்து சென்றதாக பெங்களூரு ஜோதிடர் மீது போலீசில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Update: 2023-10-11 18:45 GMT

மங்களூரு-

உடுப்பியில் குடும்ப கஷ்டம் தீர பூஜை செய்வதாக கூறி ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகளை அபேஸ் செய்து சென்றதாக பெங்களூரு ஜோதிடர் மீது போலீசில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ஜோதிடர்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன் தந்திரி. ஜோதிடரான இவர் பெங்களூருவில் வசித்து வந்தார். இவருக்கும், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபா என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அப்போது பிரதீபா தனது குடும்ப கஷ்டங்களை ஜோதிடர் பிரவீன் தந்திரியிடம் கூறினார். அதைக்கேட்ட பிரவீன் தந்திரி குடும்ப கஷ்டத்தை தீர்க்க சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்றும், அதற்காக பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

அதற்கு பிரதீபா ஒப்புக்கொண்டார். அதையடுத்து கடந்த மே மாதம் 24-ந் தேதி பிரதீபாவின் வீட்டுக்கு சென்ற ஜோதிடர் பிரவீன் தந்திரி அங்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் பிரதீபாவை அழைத்துக் கொண்டு அவர் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜைகளை செய்தார்.

வலைவீச்சு

பூஜையில் பிரதீபாவின் ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகளை வைக்க கூறி பிரவீன் தந்திரி உத்தரவிட்டார். அதன்பேரில் பிரதீபாவும் தன்னுடைய ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பூஜையில் வைத்தார். பின்னர் சிறப்பு பூஜை முடிந்ததும் நகைகளை ஜோதிடர் பிரவீன் தந்திரி எடுத்துச் சென்றார். சில நாட்கள் கழித்து நகைகளை திருப்பி தருவதாக பிரவீன் தந்திரி, பிரதீபாவிடம் கூறினார்.

அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் நகைகளை திருப்பி தராமல் பிரவீன் தந்திரி மோசடி செய்துவிட்டார். இதுபற்றி பிரதீபா, உடுப்பி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பிரவீன் தந்திரியை வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்