'இனிமேலும் குமாரசாமியின் பேச்சை சகித்துக்கொள்ள முடியாது'; டி.கே.சிவக்குமார் ஆவேசம்
இனிமேலும் குமாரசாமியின் பேச்சை சகித்துக் கொள்ள முடியாது என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு:
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
குமாரசாமிக்கு எதிராக பேசக்கூடாது என்று இருந்தேன். ஆனால் இனிமேலும் அவரது பேச்சை சகித்துக்கொள்ள முடியாது. கூட்டணி ஆட்சி கவிழ்ந்த விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி அவர் பேசுகிறார். முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிராகவும் அவர் பேசுகிறார். கூட்டணி ஆட்சியில் குமாரசாமிக்கு நாங்கள் ஆதரவு வழங்கினோம். அந்த ஆதரவை அவரால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.
குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பகல்-இரவாக செயல்பட்டவர்களுடன் அவர் கைகோர்த்துள்ளார். குமாரசாமி, எடியூரப்பா, பிரகலாத் ஜோஷி ஆகியோர் எந்த அளவுக்கு ஒருவரையொருவர் தாக்கி பேசிக்கொண்டனர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த அரசியல் சூழ்நிலை குறித்து பகிரங்க விவாதத்திற்கு நான் தயாராக உள்ளேன். இன்றைய தலைமுறையினருக்கு இது தெரிய வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.